குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அசாரூதின் ஓவைசி, இந்து முஸ்லீம் மோதலை கிளப்புவதே பாஜகவின் வேலை என்று கூறினார்.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 99 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. இப்போது பூபேந்திர பட்டேல் தலைமையிலான பாஜக ஆட்சியை நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜகவை எப்படியாவது தோற்கடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் பல எதிர்க்கட்சிகள் களமிறங்கி உள்ளன. காங்கிரஸைத் தவிர ஆம் ஆத்மி, ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியும் அங்குக் காலூன்ற முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஓவைசி பாஜக- ஆர்எஸ்எஸ் அமைப்பை மிகக் கடுமையாகச் சாடி பேசினார். ஓவைசி பேசியதாவது:-
பாஜக-ஆர்எஸ்எஸ் இப்போது புதிய நாடகத்தை ஆரம்பித்து உள்ளன. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் உள்ள மதரஸாவிற்கு சென்றதாகச் சொல்கிறார்கள். ஆனால், பாஜக ஆட்சியில் உள்ள அசாமில் மதரஸாக்கள் இடிக்கப்படுகின்றன. உத்தரப் பிரதேசத்தில் மதரஸாக்கள் குறித்துக் கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். பாஜகவிடம் வளர்ச்சி என்று காட்ட எதுவும் இல்லை. அவர்கள் இந்து-முஸ்லிம்கள் சண்டையிடுவதை மட்டுமே காட்டுவார்கள். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவைச் சந்தித்து, அவருக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என்று மோகன் பகவத்தால் சொல்ல முடியுமா? அவரை பாலியல் பலாத்காரம் செய்து பலரைக் கொன்றவர்களைக் குஜராத் பாஜக அரசு விடுவித்துள்ளது. கலவரத்தால் உறவினர்களையும் உடைமைகளையும் இழந்தவர்களை மோகன் பகவத் சந்திப்பாரா?. இவ்வாறு அவர் கூறினார்.