திமுக – பாஜக இடையிலான போரில் காவல்துறையினர் தலையிட வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனைத்தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதேபோல் இன்று மாலைக்குள் தவறு செய்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் மீது தொடர்ந்து பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக காவல்துறை ஆரம்பத்தில் சுணக்கமாக செயல்பட்டாலும், இப்போது விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அனைத்து இடங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு இயக்கம் தீவிரவாத கொள்கை மூலம் தான் வளர வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கு நம் மண்ணில் இடமில்லை. அதனால் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் – ஒழுங்கில் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் இருக்கக் கூடாது. அதனால் மாநில அரசு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும்.
அதேபோல் பாஜக சார்பாக கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கடந்த 6 நாட்களாக முதல்வரை கண்டித்து போஸ்டர் ஒட்டியவர்ளை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை ஆ.ராசா பேச்சுக்கு ஒரு எஃப்ஐஆர் கூட போடப்படவில்லை. ஆனால் ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்தவர்களை கைது செய்து வருகிறார்கள். தமிழக பாஜகவினரை தான் உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. காவல்துறையினர் பாஜகவினரை துரத்தி துரத்தி கைது செய்து வருகிறார்கள். இதனால் மாநில அரசுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் பாஜகவின் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பாஜக தொண்டர்கள் மீது கைவைத்த ஒவ்வொரு காவல்துறை அதிகாரி மீதும் புகார் அளிக்கப்படும். ஒரு மாநில தலைவராக அது என் கடமை. பாஜகவினர் போல் காவல்துறையினருக்கு யாராலும் மதிப்பளிக்க முடியாது. ஆனால் காவல்துறையினர் புரிந்து நடக்க வேண்டும்.
பாஜக தொண்டர்கள் சிறையில் இருந்து வெளிவந்த பின், நானும் முதல்வரை கண்டித்து போஸ்டர் ஒட்டுவேன். பாஜக தொண்டர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். இதற்கு கோவை மாநகர காவல்துறை அதிகாரி தான் காரணம். கோவையில் 144 தடை உத்தரவு போட்டாலும், ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதனால் காவல்துறையினர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
இந்தியாவில் பாஜக 70 ஆண்டுகளாக உள்ளது. இன்னும் பல ஆண்டுகளாக இருக்கும். திமுக அரசின் ஏவல் துறையாக காவல்துறை செயல்படுகிறது. மத்திய அரசு இதனை பார்த்து சும்மா இருக்காது. மத்திய அரசு பொறுப்பில் இருந்தவர்கள் பாஜகவின் முன்னாள் தலைவர்கள் தான். மம்தா பானர்ஜியின் நிலையை பாருங்கள். எல்லாம் கணக்கு வைத்து வருகிறோம். இது பாஜகவுக்கும் திமுகவுக்கு இடையிலான போர். இதில் காவல்துறையினர் தலையிட வேண்டாம். இந்தியா முழுவதும் பாஜகவினர் எங்கு வன்முறையில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் முடிவு செய்ய வேண்டும். இன்னும் அமைதியாக தான் செயல்படுகிறோம். இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களால் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும், தமிழக அரசு நீதிக்கு புறம்பாக பாஜகவினருக்கு எதிராக காவல் துறையினரை பயன்படுத்தி வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். அதில், பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல் சம்பவங்களை பட்டியலிட்டு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார். இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை அறிக்கைகள் எதுவும் வெளியிடவில்லை என்றும், தமிழக அரசு நீதிக்கு புறம்பாக பாஜகவினருக்கு எதிராக காவல் துறையினரை பயன்படுத்தி வருவதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இதன் மூலம், திமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க, தமிழக பாஜக முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு, பல முறை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.