6ம் வகுப்பு புத்தகத்தில் உள்ள சனாதன பாடத்தை உடனடியாக நீக்கவும்: முத்தரசன்!

சி.பி.எஸ்.இயின் 6-ஆம் வகுப்பு பாடத்தில் சனாதனம் குறித்த பாடத்தை நீக்க, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அதை எரிக்கும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபடும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எம்.பி., ஆ ராசா சனாதனம் குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி பேசியதாக, பாஜக வினர் கலவரத்தை உண்டாக்க பார்க்கின்றனர். ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ 6-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் சனாதனம் பற்றி ஒரு பாடம் உள்ளது. அதில் மேல் ஜாதி, கீழ் சாதி குறித்து படத்தோடு விளக்கம் உள்ளது. இதற்கு ஒன்றிய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதனை நீக்கவில்லை என்றால் இந்த பாடம் இடம்பெற்றுள்ள புத்தகத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எரிக்க வேண்டிய சூழ்நிலை வரும்.

அண்ணாமலையை பார்த்து தான் கேட்கிறேன். ஏன் இப்படி 6-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் சனாதன பற்றி ஒரு பாடம் உள்ளது என்று. சனாதனம் குறித்து பேசிய ஆ.ராசாவை கண்டித்து போராட்டம் நடத்தி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைத்து, திமுக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதிசெய்கிறது. கோவை, மதுரை உள்பட சில மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கண்டுபிடித்து யாராக.. இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காவல்துறை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் காலம் தாமதம் இல்லாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அவரை சுட்டுக்கொன்ற, ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுக்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

வன்முறையை தூண்டக்கூடிய வகையில் அண்ணாமலை பேசுகிறார். இவரது பேச்சு சமூக விரோதிகளுக்கு ஊக்கமளிக்கிறது. தேசிய பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்குரிய சம்பளத்தை கொடுக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.