மொழியை வைத்து நாட்டை யாரும் பிரிக்க முடியாது என, பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேசினார்.
மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அலுவலகத்தில் முன்னாள் எம்.பி.யும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான டாக்டர் சுப்பிரமணியசாமி பிறந்த நாள் விழா நடந்தது. இதில், சுப்பிரமணியசாமி பேசியதாவது:-
இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது. நாட்டின் கலாசாரத்தை வெள்ளைக்காரர்கள் அழித்ததால், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம். தற்பொழுது அதிலிருந்து மீண்டு சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறோம். ராணுவ உற்பத்தி அதிகரித்து இருப்பது இதற்கு முக்கிய காரணம். நாம் நம்பர் ஒன்னாக ஒரு காலத்தில் இருந்தோம். அதனால் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்து நம்மை பிரித்து பொருளாதாரத்தை அழித்தனர். ஒரு நாடு சிறந்து விளங்க பொருளாதாரக் கொள்கை, ராணுவக் கொள்கை பலமாக இருக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் ஆரியன்-திராவிடன் என்ற பிரிவினையை உண்டாக்கினார்கள். திராவிடம் என்பதில் திராவித் என்பது மூன்று கடலும் சங்கமிக்கும் இடம் என்று பொருள். இது திராவிடமாக மாறியது. ஆரியன்-திராவிடன் என்ற வார்த்தை சமஸ்கிருதம் இல்லை.
தமிழ் முக்கியம் தான். இந்தியும் கற்றுக் கொண்டால் என்ன தவறு. கட்டாயமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை, இந்தி கற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கு ஏன் தடை போடுகிறீர்கள் என்று தான் கேள்வி எழுப்புகிறேன். மொழியை வைத்து நாட்டை யாரும் பிரிக்க முடியாது. தமிழகத்தில் அரசின் கையில் இருக்கும் 32 ஆயிரம் கோவில்களை விடுவிக்க வேண்டும். இது தொடர்பாக வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டு அது சார்பாக நோட்டீஸ் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு தற்போது வரை தமிழக அரசு பதில் மனுவில் தாக்கல் செய்யவில்லை. தி.மு.க. தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது. அடுத்த சட்ட சபையில் ஒரு மாற்றுக் கட்சியாக பா.ஜ.க. வரும். அடுத்த சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அடிக்கடி தமிழகம் வந்து தி.மு.க. அரசுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்வேன். இதற்கு உங்களின் ஆதரவு வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.