தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் பரவி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என பல்வேறு குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.
தற்போது, பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் தமிழகத்தில் பரவி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு தவறிவிட்டதோ என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
அதேசமயம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனிமேல் நடைபெறா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முழு கவனம் செலுத்தி, பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டித்து தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை உடனடியாக நிலைநிறுத்த வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.