தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விசிக திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 2 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு ஊர்வலம் நடத்த பல்வேறு நிபந்தனைகளை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது. இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று விசிக தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-
மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்தபோது, அந்த துயரச் சம்பவத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு இனிப்பு வழங்கி கொண்டாடியது. இந்த அமைப்பின் முந்தைய கால நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியை கொன்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு அவர் பிறந்த நாளில் அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்க கூடாது.
விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு எதிராக இந்த அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவளராக சித்தரிக்க முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ், நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அத்ததுடன் விசிக சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளது. இவ்வாறு அந்த மனுவில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.