பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும்: அன்புமணி

மாணவிகளை சீண்டிய மாணவனை கண்டித்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த வாரம் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சிகரெட் பிடித்துள்ளான். ஸ்கூல் முடிந்து, சேவூர் கிராம பகுதியில் அந்த மாணவன் சிகரெட் பிடித்ததுடன், அந்தவழியாக வந்த மாணவியரின் முகத்தில் புகை விட்டுள்ளதாக கூறப்படுகிறது. முகத்தில் புகையை விட்டு கேலி, கிண்டலும் செய்துள்ளார். பிறகு மறுநாள் ஸ்கூலுக்கு வந்து ஆசிரியர்களிடம் இந்த சம்பவம் குறித்து அந்த மாணவிகள் புகார் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் திலீப் குமார், வெங்கடேசன், நித்தியானந்தம், பாண்டியன் ஆகியோர், சிகரெட் பிடித்த அந்த மாணவனை கண்டித்துள்ளனர். பிறகு, மாணவனை அடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மாணவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், மாணவருக்கு உள்காயம் ஏற்பட்டதாக கூறி அவரது பெற்றோர், ஆரணி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் அந்தப் பள்ளிக்கு நேரடியாகவே சென்று பெற்றோர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமார் ஆகியோரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ்குமார் சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டார். மேலும், ஆசிரியர்கள் நித்தியானந்தம், பாண்டியன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இந்த அதிரடியானது, பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாணவனின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளியில் குவிக்கப்பட்டனர். ஆசிரியர்களை உடனடியாக பணியில் அமர்த்த கோரியும், பணியிட மாற்றம் செய்த ஆசிரியர்களை மீண்டும் தங்கள் பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மாணவ, மாணவிகள் கோஷம் எழுப்பினார்கள். கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்கும் மேலாக இந்த போராட்டம் நடந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. “சமத்துவம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் பாகுபாடு பார்ப்பார்களா? தவறு செய்த மாணவனுக்கு அறிவுறை வழங்கிய ஆசிரியருக்கு தண்டனையா?” போன்ற வாசகங்கள் சாலையில் சென்றிருந்தோரின் கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில், மாணவிகளை சீண்டிய மாணவனை கண்டித்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் சேவூரில் சிகரெட் பிடித்து மாணவிகள் மீது புகை விட்ட 11ம் வகுப்பு மாணவரை கண்டித்ததற்காக இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; இரு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது!

பள்ளிகள் கோயில்களுக்கு இணையானவை. கல்வி மட்டுமல்ல.. கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றையும் கற்றுத்தர வேண்டியது தான் ஆசிரியரின் பணி. அதைத்தான் ஆசிரியர்கள் செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமல்ல; இது தவறான முன்னுதாரணமாகிவிடும். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து பள்ளி மாணவ, மாணவியரும், ஊர்மக்களும் சாலை மறியல் போராட்டம் செய்துள்ளனர் என்பதிலிருந்தே உண்மை நிலை என்ன? என்பதை உணர முடியும். தவறுகள் திருத்தப்பட வேண்டும்.. தொடரக் கூடாது!

மாணவனை கண்டித்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். மற்ற இரு ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு அற நெறிகள் கற்றுத் தரப்படுவதை கட்டாயமாக்க வேண்டும்!. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.