கேரளா பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்று, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தென்மாநிலங்களில் சுற்று பயணம் செய்து வருகிறார். தமிழகத்தில் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட நட்டா, தற்போது கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கேரளாவில் சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இங்கு வகுப்பு வாத மோதல்கள் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகளின் கேந்திரமாக மாறி உள்ளது. சமீபத்தில் நடந்த சம்பவங்கள் இதனை உணர்த்தி உள்ளன. மக்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளை அனைவரும் பார்த்தனர். மக்களை பாதுகாக்க இந்த அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மாறாக இந்த அரசு ஊழல் அரசாக மாறி உள்ளது. தங்க கடத்தலில் முதல் மந்திரி பினராய் விஜயனின் குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் நியமனத்தில் முதல் மந்திரியின் அலுவலகத்தில் தொடர்பு உள்ளவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் லோக் ஆயுக்தா சட்டத்தை வலுவிழக்க செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். கேரள மாநிலம் இப்போது கடனில் மூழ்கியுள்ளது. அனைத்து திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.