மனுதர்மத்தின் மீது கோபப்படுங்கள், அதை எடுத்து சொன்ன ஆ ராசா மீது எதற்காக கோபப்படுகிறீர்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அதன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவையை பதற்றமான இடமாக மாற்றிவிடக் கூடாது. கோவையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மூலம் கோவை அமைதியாக இருக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாஜகவும் விரும்பவில்லை. நேற்றைய தினம் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும். ஒரு மாநில முதல்வரை மிரட்டும் தொனியில் அண்ணாமலை பேசுகிறார், தமிழக காவல் துறையை மிரட்டியுள்ளார். ஒரு அரசியல் கட்சி தலைவர் போல் அல்லாமல் பேட்டை ரவுடி போல் அண்ணாமலை செயல்படுகிறார்.
தமிழகத்தில் 356 சட்டபிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். ஓட்டு மக்களை சந்தித்து ஓட்டுகளை வாங்கி ஜெயிக்க முடியாத இவர்கள் குறுக்கு வழியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கலைக்க நினைக்கிறார்கள். காந்தி ஜெயந்தி தினத்தன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலகத்திற்கு என்ன இருக்கிறது. ஆர்எஸ்எஸ் ஊர்வலகத்திற்கு எப்படி நீதிமன்றம் அனுமதி அளித்தது என தெரியவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய மூன்றும் இணைந்து மனிதநேய சங்கிலி போராட்டம் அக்டோபர் 2 ஆம் தேதி நடத்த இருக்கிறோம். மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைவது பாஜக, ஆர்எஸ்எஸ், அமைப்புகளுக்கு கண்களை உறுத்துகிறது. ஆன்லைன் ரம்மி சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள். இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் வன்முறையை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு பணமதிப்பு குறைந்துள்ளது. பங்கு சந்தையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இவற்றை மூடி மறைக்க பாஜகவினர் தொடர்ந்து சச்சரவுகளை கிளப்பி திசை திருப்பி வருகிறார்கள். பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு எதிராக காவல் துறை உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயல்கிறது. இந்தியாவின் பெயரை ஹிந்தியா என மாற்ற பார்க்கிறார்கள்.
நீலகிரி எம்பி ராசாவின் பேச்சில் எந்த தவறும் கிடையாது. ஆ ராசா பேசிய மேடையில் நானும் இருந்தேன். அவரது பேச்சை வெட்டி ஒட்டி திரித்து வீடியோவை ஒளிபரப்பி வருகிறார்கள். வர்ணாசிரம தர்மத்தில் உள்ளதைதான் அவர் சொல்லியுள்ளார். இதற்காக வர்ணாசிரம தர்மத்தின் மீதுதான் கோபம் வர வேண்டுமே தவிர அதை எடுத்து சொன்ன ராசா மீது கோபப்படக் கூடாது. பாஜக அரசியல் நாடகம் ஆடுகிறது. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.