இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றாலும் அதற்காக இந்தியா ஒருபோதும் போரை கண்டு பயப்படாது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
இந்திய ராணுவத்தில் பணியின் போது உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நினைவஞ்சலி கூட்டம் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் கங்கரா மாவட்டம் பதோலியில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் கடந்த 2019-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பாலாகோட்டில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் நினைவிருக்கலாம். இது பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவின் புதிய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. பயங்கரவாதத்தின் வேரை வெட்டி எறிவதற்கான இந்தியாவின் உறுதியை உலகத்திற்குக் காட்டியது. அவசியம் ஏற்பட்டால் நாட்டுக்கு உள்ளே மட்டுமல்ல, நாட்டுக்கு வெளியேயும் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய வலிமை இந்தியாவிடம் உள்ளது. அத்தகைய வலிமை பொருந்திய வீரர்களை இந்திய ராணுவம் கொண்டுள்ளது. முன்பு போல் இல்லை. இந்தியாவின் தோற்றம் மாறியுள்ளது. உலக அளவில் இந்தியாவின் குரலுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மிகவும் வலிமையான ராணுவத்தை கொண்டுள்ளது. உலக நாடுகள் இந்திய ராணுவத்தின் வலிமையை மதிப்புடன் பார்க்கின்றன. ராணுவ வீர்களையும், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களது குடும்பத்தினரையும் நமது நாடு போற்றுகிறது. ராணுவ வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது. இந்திய ராணுவத்தில் ஒருவரின் பின்னணிக்கோ அல்லது மதத்திற்கோ இடமில்லை. நமது இந்திய நாட்டின் தேசியக்கொடி உயர்ந்து பறக்க வேண்டும் என்பதே குறிக்கோள். நமது இந்திய ராணுவம், நாட்டு மக்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்து வருகிறது.
குறிப்பாக நமது இந்திய ராணுவம் கடமை, தேசப்பற்று, தியாகம் மற்று ஒழுக்கத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. தற்போது இந்தியாவின் ராணுவம் பலமடைந்துள்ளதால், உலக அமைதிக்காக குரல் கொடுக்கும் தகுதி கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியா மிக வலிமையான ராணுவத்தை கொண்டுள்ளது. மிக வலிமையான ராணுவத்தை கொண்ட போதிலும் இதுவரை எந்த ஒரு நாட்டையும் இந்தியா தாக்கியது கிடையாது.
இதேபோல் எந்த ஒரு நாட்டின் இடத்தையோ நிலத்தையோ அபகரித்தது கிடையாது. இந்தியா எப்போதும் அமைதியைத் தான் விரும்புகிறது. இந்தியா அமைதியான நாடு என்பதற்காக இந்தியா ஒருபோதும் போரை கண்டு பயப்படாது. இந்தியா கோழை நாடு என்று நினைத்துவிடாதீர்கள். இந்தியாவின் நல்லிணக்கத்துக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா பார்த்துக்கொண்டிருக்காது, தக்க பதிலடி கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.