கோவை ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. சத்குரு ஜக்கி வாசுதேவவால் நிறுவப்பட்ட இந்த மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதி யோகி சிலை உள்ளது. ஆதியோகி சிலையை பிரதமர் மோடி கடந்த 2017 ம் ஆண்டில் மகாசிவராத்திரியில் திறந்து வைத்தார். அதன்பிறகு ஆண்டுதோறும் மகாசிவராத்திரி தினத்தில் ஈஷா யோகா மையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தடை விதிக்க கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஈஷா யோகா மையம் மீது நோட்டீஸ் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், ‛‛கல்வி நோக்கத்துக்காகவும், மாணவர் விடுதிக்காகவும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், ‘சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பது ஏன்?’ என கேள்வி எழுப்பினர். அதோடு ஈஷா அறக்கட்டளையின் கட்டடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.