ரஷ்யாவுடனான ராணுவ தளவாட கொள்முதலில் எந்தச் சிக்கலும் இல்லை. இந்தியா, அமெரிக்காவிடமிருந்தும் நிறைய கொள்முதல் செய்துள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 4 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஆகியோரை தனித் தனியாக சந்தித்த அவர், இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு, தளவாட ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டது.
பின்னர் ஜெய்சங்கரும், ஆண்டனி பிளிங்கனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:-
உக்ரைனில் நடைபெறும் போருக்குப் பிறகு ரஷ்யாவிடம் இருந்து ராணுவத் தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா எந்தச் சிக்கலையும் எதிர்கொண்டதாக நான் நினைக்கவில்லை. ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை நாங்கள் எங்கிருந்து பெறுகிறோம் என்பது ஒரு பிரச்சினை அல்ல. தற்போது போர் காரணமாக ஏற்பட்ட அரசியல் பதட்டத்தால் அது ஒரு பிரச்சினையாகி இருக்கிறது. தொழில்நுட்ப தரம், திறன், குறிப்பிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் விதிமுறைகள் ஆகியவற்றை நாங்கள் பார்க்கிறோம், மேலும் எங்கள் தேசிய நலனுக்காக நாங்கள் நம்பும் ஒரு தேர்வை செய்கிறோம்.
கடந்த 15 ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவிடமிருந்து நிறைய கொள்முதல் செய்துள்ளது. பிரான்சிடம் இருந்து நாங்கள் ரஃபேல் விமானத்தை வாங்கினோம், இஸ்ரேலிடம் இருந்தும் வாங்கி உள்ளோம். எங்களைப் பொறுத்தவரை, போட்டி நிறைந்த சூழ்நிலையில் சிறந்த ஒப்பந்தத்தை எப்படி பெறுவது என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது பேசிய பிளிங்கன், பருவநிலை மாற்றத் துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். குவாட் மற்றும் ஜி20 அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இரு நாடுகள் இடையேயான உறவுகள் உண்மையான முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.