முடிந்தால் என்னை கைது செய்யட்டும்: அண்ணாமலை சவால்!

முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என, பாஜக தலைவர் கே.அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

திண்டுக்கல் அடுத்துள்ள குடைப்பாறைப்பட்டி பகுதியில், கடந்த 25 ஆம் தேதி, பாஜக மாநகர மேற்கு மண்டல தலைவர் செந்தில் பால்ராஜ் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இது தொடர்பாக தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:-

பாரதிய ஜனதா கட்சியின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்பினரின் உடைமைகள் சேதப்படுத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் நடந்த தீ வைப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். இதில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் தொடர் போராட்டம் காரணமாக ஆங்காங்கே நடைபெற்ற தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், என்னை கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறார். முடிந்தால் என்னை கைது செய்யட்டும். இவ்வாறு அவர் கூறினார்.