பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்தது போல், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்து உள்ளார்.
பி.எப்.ஐ. எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு கடந்த 2006 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் துவக்கப்பட்டது. இது டெல்லியை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது. அண்மையில், பி.எப்.ஐ. அமைப்பின் தலைவர்கள், துணை தலைவர்கள், நிர்வாகிகள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், மத்திய புலனாய்வு அமைப்புகள் சோதனை நடத்தின. இந்நிலையில், பி.எப்.ஐ., அமைப்பை சட்ட விரோதமானது என மத்திய அரசு அறிவித்துள்ளது. பி.எப்.ஐ., அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஊபா சட்டத்தின் கீழ் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பையும், அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:-
பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்தது போல், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் தடை செய்ய வேண்டும். அந்த அமைப்பை விட மோசமான அமைப்பு, ஆர்.எஸ்.எஸ். அதை தடை செய்து விசாரணை நடத்த வேண்டும். மத்திய பாஜக அரசு, இஸ்லாமிய அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் காரணமாக நாட்டின் நிலைமை மோசமாகி விட்டது. மதவெறியைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்தகைய அரசை தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, மருத்துவ சிகிச்சைக்காக வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சிங்கப்பூர் செல்ல, லுாலு பிரசாத் யாதவுக்கு, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.