தென்கொரிய கடற்படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் சென்னை வந்துள்ளன!

தென்கொரிய கடற்படையைச் சேர்ந்த இரண்டு ஆர்ஓகேஎஸ் வகை கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளன.

தென் கொரியாவின் இரு கடற்படை கப்பல்கள், நான்கு நாள் நல்லெண்ண பயணமாக, இன்று காலை சென்னை வந்தன. இன்று புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை இவ்விரு கப்பல்களும் சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த இரு கப்பல்களிலும், கொரியன் கடற்படை கல்வி மையத்தில் இறுதியாண்டு பயிலும் 164 மாணவர்கள் உள்பட 470 மாலுமிகள் வந்திருப்பதாக தென்கொரிய தூதரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும், 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் தென்கொரியாவின் ஆர்ஓகேஎன் கப்பல்கள் சென்னை வந்துள்ளது. தென் கொரிய கடற்படை கப்பல்கள் பயிற்சிக்காக சென்னை வந்திருப்பது இது மூன்றாவது முறையாகும்.

இந்த பயணத்தின் போது, கொரிய கடற்படை தரப்பிலிருந்து, மெரினா கடற்கரையை தூய்மை செய்தல், ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் சயின்ஸ் நிறுவனத்தில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்டவற்றிலும் ஈடுபடுவார்கள். இந்திய கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் உள்ளனர்.