சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு ஆகிய இடங்களில் ரூ.174.48 கோடி மதிப்பீட்டிலான வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.9.2022) நீர்வளத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகளின் சார்பில் செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு ஆகிய இடங்களில் 174.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனாலும் பல இடங்களில் 75 சதவீதம் அளவுக்கு தான் பணிகள் நடந்துள்ளன. எனவே பணிகளை விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி வருகிறார். வடகிழக்கு பருவமழை இன்னும் 20 நாட்களில் தொடங்கிவிடும் என்பதால் சென்னை புறநகரில் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்றுள்ளன என்பதை முதல்-அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். இதற்காக தென் சென்னைக்கு உட்பட்ட 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செம்மஞ்சேரி டி.எஸ்.எப். பின்புறம், பெரும்பாக்கம் அருகே உள்ள பாலம், நேதாஜி நகர் பிரதான சாலை, வேளச்சேரி-தாம்பரம் சாலையில் உள்ள பாலாஜி பல் மருத்துவ கல்லூரி அருகே கட்டப்படும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார். பள்ளிக்கரணை, தாமரைக்குளம் பகுதி, வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி, அடையார் கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலை, இந்திரா நகர் 3-வது பிரதான சாலை ஆகிய இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். மொத்தம் ரூ.174.48 கோடி செலவில் நடைபெற்று வரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், பொன்முடி, மா.சுப்பிரமணியன், அதிகாரி சந்தீப் சக்சேனா, கலெக்டர் ராகுல்நாத் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடன் சென்றிருந்தனர்.