குஜராத்தில் தேசிய விளையாட்டு திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது.
குஜராத்தில், தேசிய விளையாட்டு 36வது சீசன் நடக்கிறது. இதில் 28 மாநிலம், 8 யூனியன் பிரதேசம், இந்திய ஆயுதப்படையை சேர்ந்த 7000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 36 வகையான விளையாட்டு போட்டிகள், ஆமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர் என, 6 நகரங்களில் நடக்கிறது. இம்முறை கோகோ, யோகா, மல்லர் கம்பம் அறிமுகமாகின்றன. இதற்கான போட்டிகள் வரும் அக். 12 வரை நடக்கின்றன. ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் துவக்க விழா நடந்தது. கலை நிகழ்ச்சிகளுடன் துவக்க விழா ஆரம்பமானது. பிரதமர் மோடி, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல், ஹாக்கி இந்தியா புதிய தலைவர் திலிப் டர்க்கி, தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திறந்தவெளி காரில் மைதானத்தை சுற்றி வந்த மோடி, ரசிகர்களை நோக்கி கையசைத்தார். பின், சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, பாட்மின்டன் வீராங்கனை சிந்து, மல்யுத்த வீரர் ரவி தாஹியா, பளுதுாக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, குஜராத் நீச்சல் வீராங்கனை மானா படேல், துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் ஆகியோரது முன்னிலையில் தேசிய விளையாட்டை முறைப்படி துவக்கி வைத்தார். வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடந்தது. இந்திய டென்னிஸ் வீராங்கனை அன்கிதா ரெய்னா, வீரர், வீராங்கனை சார்பில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சி அரங்கேறியது. கண்கவர் வாணவேடிக்கையுடன் துவக்க விழா முடிவுக்கு வந்தது.
தேசிய விளையாட்டு பெண்கள் அணிகளுக்கான டென்னிஸ் முதல் சுற்றில் தமிழகம், ஹரியானா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய தமிழக அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் மஹாராஷ்டிரா அணி 2–0 என, டெல்லியை வீழ்த்தியது. அரையிறுதியில் மஹாராஷ்டிரா, தமிழக அணிகள் மோதுகின்றன. ஆண்கள் அணிகளுக்கான டென்னிஸ் முதல் சுற்றில் தமிழகம், டெல்லி அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய தமிழக அணி 1–2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
ஆண்களுக்கான தனிநபர் 10 மீ., ‘ஏர் ரைபிள்’ துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்றில் பங்கேற்ற தமிழகத்தின் ஸ்ரீ கார்த்திக் சபரி ராஜ், 632.2 புள்ளிகளுடன் முதலிடம் பைனலுக்கு தகுதி பெற்றார். ஆண்களுக்கான தனிநபர் 25 மீ., ‘ரேபிட் பயர் பிஸ்டல்’ பிரிவு துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்று–1ல் ஹிமாச்சல பிரதேசத்தின் விஜய் குமார் பங்கேற்றார். கடந்த 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற விஜய் குமார், 290.9 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்தார். உத்தரகாண்ட்டின் அனுகுர் கோயல் (293.10) முதலிடம் பிடித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘உலகின் பெரிய மைதானத்தில் இந்தியாவின் பெரிய விளையாட்டு திருவிழா நடக்கிறது. இதனை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. கடந்த காலத்திலும் நம் விளையாட்டு நட்சத்திரங்கள் திறமையானவர்கள் தான். அப்போதே அவர்கள் பதக்கம் வென்றிருப்பர். ஆனால் விளையாட்டில் ஊழல் இருந்ததால் அவர்களால் சாதிக்க முடியவில்லை. நாங்கள் அதனை சுத்தம் செய்து இளைஞர்களிடம் நம்பிக்கை அளித்துள்ளோம். விளையாட்டு துறையில் கிடைக்கும் வெற்றி, நாட்டின் மற்ற துறைகளிலும் வெற்றிக்கு வழிவகுக்கும். விளையாட்டின் மென்மையான சக்தி, உலகெங்கிலும் நம் நாட்டின் நற்பெயரை கணிசமாக மேம்படுத்தும். கடந்த 8 ஆண்டுகளில் விளையாட்டுக்கான பட்ஜெட் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய நட்சத்திரங்கள் மிகக் குறைந்த அளவிலான போட்டிகளில் பங்கேற்று வந்தனர். ஆனால் தற்போது 300க்கு மேற்பட்ட சர்வதேச தொடர்களில் விளையாடி வருகின்றனர்’’ என்றார்.