காா்களில் 6 ‘ஏா்பேக்’ கட்டாயம் என்ற விதிமுறை ஓராண்டுக்கு ஒத்திவைப்பு!

காா்களில் 6 ஏா்பேக் (காற்றுப் பை) கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதி அமலுக்கு வருவதை ஓராண்டுக்கு மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

காா்கள் விபத்துக்குள்ளாகும்போது அதில் பயணிப்பவா்களின் உயிரைக் காப்பதில் காற்றுப் பைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 6 காற்றுப் பைகள் இருந்தால் விபத்தின்போது காரில் பயணிக்கும் அனைவரது உயிரையும் பாதுகாப்பது மேலும் உறுதி செய்யப்படும். இந்தியாவில் பெரும்பாலான காா்களில் முன்னிருக்கைகளில் இருப்பவா்களுக்கு காற்றுப் பை வசதி உள்ளது. 6 காற்றுப் பைகள் இருந்தால் முன்பக்கம் மட்டுமல்லாது பக்கவாட்டில் இருந்து காற்றுப் பைகள் விபத்தின்போது விரிவடைந்து பயணிகளின் உயிரைக் காக்கும். எனவே, 8 போ் பயணிக்கும் வகையிலான வாகனங்களில் 6 காற்றுப் பைகள் கட்டாயம் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இது 2022, அக்டோபா் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது அமலாவது 2023, அக்டோபா் 1-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச அளவில் பல்வேறு பொருள்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், வாகனத் தயாரிப்புத் துறை சுணக்கத்தை எதிா்கொண்டுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்திலும் எதிரொலித்து வருகிறது. எனவே, பயணிகள் வாகனங்களில் 6 ஏா்பேக்குகள் இருக்க வேண்டும் என்ற விதியை அமலாக்குவது 2022, அக்டோபா் 1-க்கு பதிலாக 2023 அக்டோபா் 1-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது. மோட்டாா் வாகனங்களில் பயணிப்பவா்கள் அனைவரும் பயணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ராஷ்ட்ரிய சேவா சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கட்கரி பேசியதாவது:-

உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா. ஏழை மக்கள் தொகை கொண்ட பணக்கார நாடு. நமது நாடு பணக்கார நாடு. ஆனால் மக்கள் வறுமை, பட்டினி, வேலையின்மை, பணவீக்கம், சாதி பாகுபாடு, தீண்டாமை மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு நல்லதல்லாத பிற காரணிகளை எதிர்கொள்கிறார்கள். சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய அவசியம் உள்ளது. சமூகத்தில் இரு பிரிவினரிடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது. இதேபோல் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அதிகரித்துள்ளது. ஏழை-பணக்காரர் இடைவெளியை குறைப்பதற்கு கல்வி, சுகாதாரம் மற்றும் சேவை துறைகளில் பணியாற்ற வேண்டியது அவசியமாகும். நாட்டில் 124 மாவட்டங்கள் சமூக, கல்வி மற்றும் சுகாதார அடிப்படையில் பின்தங்கியுள்ளன. நகர்ப்புறங்கள் அதிகளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால் வசதி வாய்ப்புக்கள் இல்லாததால் ஏராளமான மக்கள் நகரங்களுக்கு இடம்பெயருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.