குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் அரசியல் விவகார துணை பொறுப்பாளராக ராகவ் சதா நியமிக்கப்பட்டதிலிருந்தே அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
ராகவ் சதா குஜராத் மாநிலத்தின் தேர்தல் துணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதிலிருந்தே அவர் கைது செய்யப்படுவார் என்று எங்களால் உணர முடிந்தது. அவர் தற்போது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அவரை எந்த அமைப்பைப் பயன்படுத்தி கைது செய்யலாம் மற்றும் எதற்காக கைது செய்யலாம் என்பது குறித்து பலர் யோசித்துக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், எந்த அமைப்பு ராகவ் சதாவை கைது செய்ய திட்டமிடுகிறது என்றும், எதற்காக அவர் கைது செய்யப்படலாம் என்பது குறித்தும் அவர் தெரிவிக்கவில்லை. அதேபோல டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு கிடைக்கும் ஆதரவு குறித்த பயத்தால் பாஜக ஆம் ஆத்மியின் தலைவர்களை கைது செய்ய திட்டமிடுவதாக தெரிவித்தார். ஆனால், குஜராத் மக்கள் இந்த முறை அரவிந்த் கேஜரிவாலை தேர்ந்தெடுப்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்றார்.
ராகவ் சதா பஞ்சாப் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கு இவரது பங்களிப்பும் முக்கிய காரணம் ஆகும். அண்மையில், ராகவ் சதா குஜராத் மாநிலத்தின் தேர்தல் துணை பொறுப்பாளராக ஆம் ஆத்மியால் நியமிக்கப்பட்டார்.
கைதாவது குறித்து ராகவ் சதா கூறுகையில், கைது செய்யப்படுவது குறித்து நான் ஒரு போதும் பயந்தது கிடையாது. எனக்கு தூக்கு தண்டனைக் கொடுத்தாலும் அஞ்ச மாட்டேன். ஆம் ஆத்மிக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவினைப் பார்த்து பாஜக தூக்கமின்றி தவிக்கிறது என்றார்.