நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வர வாய்ப்பு: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, முதல்முறையாக தென் மாவட்டங்களுக்கு வந்தார். இதனையொட்டி மதுரை மாநகர், புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்று முதல் முறையாக தென் மாவட்டங்களுக்கு வந்துள்ளேன். நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்துள்ளேன். செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரை மாவட்ட அதிமுகவின் மும்மூர்த்திகள். மூவருமே கட்சிப் பணியாற்றுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 10 மாவட்டங்களில் 5 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளோம். இதே வெற்றியை தமிழகம் முழுவதும் 50 சதவிகிதம் கைப்பற்றியிருந்தால் அதிமுக ஆட்சி அமைத்திருக்கும். சற்று கவனகுறைவாக இருந்ததால், திமுக ஆட்சியை கைப்பற்றியது.

2024ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தல் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தின் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையும், ஆட்சியும் அப்படிதான் இருக்கிறது. தமிழகத்தில் ஸ்டாலினின் பொம்மை ஆட்சி நடக்கிறது. காலையில் அவருக்கு கீ கொடுத்துவிட்டால் பொம்மை போல் அவர் இரவுவரை தமிழகத்தை சுற்றி வருகிறார். பெரும்பான்மை மக்கள், தவறி திமுகவுக்கு வாக்களித்துவிட்டார்கள். அதற்கு தமிழக மக்கள், தற்போது வருத்தப்படுகிறார்கள். மதுரையில் ஒரு மந்திரி இருக்கிறார். வெளிநாட்டில் இருந்து படித்து வந்தவர். அவர்தான் பெரிய அறிவு ஜீவிபோல் பேசுகிறார். அவரது முதலமைச்சராலும், அவராலும் மதுரைக்கு எந்த திட்டமும் வரவில்லை.

அமைச்சர் மூர்த்தி தனது மகனுக்கு பிரம்மாண்ட திருமணம் நடத்தினார். இந்த பணம் எங்கிருந்து வந்தது. அதிமுக ஆட்சியில் மதுரையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைதான் தற்போது ஸ்டாலின் அடிக்கடி மதுரை வந்து திறந்து வைக்கிறார். மதுரையில் அவரது தந்தை பெயரில் நூலகத்தை அமைக்க முயற்சி செய்து வருகிறார். இதுதான் திமுக ஆட்சியில் அவர் அவரது குடும்பத்திற்காக செய்த சாதனை .

அதிமுக சார்பாக பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், காளவாசல் மேம்பாலம், புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம், தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் திட்டம், வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு மேம்பாலங்கள், வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ரூ.320 கோடியில் நான்கு வழிச்சாலை போன்ற ஏராளமான திட்டங்கள் மதுரைக்காக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக மதுரையில் நிறைவேற்றிய திட்டங்களை ஸ்டாலின் ஸ்டிக்கர் ஓட்டி திறந்து வைத்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து வாக்களித்த மக்களுக்கு மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகிய இரண்டு போனஸ் கொடுத்துள்ளது. பஸ்சில் ஓசியில் செல்வதாக அமைச்சர் பொன்முடி மக்களை கொச்சைப்படுத்துகிறார். மக்கள் வரிப்பணத்தில்தான் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது கூட அந்த அமைச்சருக்கு தெரியவில்லை. இதுபோல் அமைச்சர் துரைமுருகனும் மக்களை இழிவாக பேசி வருகிறார்.

ஸ்டாலின் மகன் உதயநிதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி என்று கூறி வாக்கு சேகரித்தார். ஆனால், அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றப்படவில்லை. மாணவர் கல்வி கடனும் ரத்து செய்யப்படவில்லை. மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு என்றார்கள். அதுவும்ந டக்கவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதியம் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை திமுக எப்போதுமே நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுகவினர் அனுமதியின்றி மேடை அமைத்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் நேற்று பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினரால் விமான நிலையத்தில் முன் அனுமதி பெறாமல் மேடை அமைக்கப்பட்டு வரவேற்பு கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதுரை விமான நிலையத்திற்கு வரும் முக்கிய பிரமுகர்களை, அந்தந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் வரவேற்பது வழக்கம். ஆனால் முதல் முறையாக அதிமுகவினர் மதுரை விமான நிலையத்தில் அனுமதியின்றி திடீர் மேடை அமைத்து எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். ஆனால் மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் மேடை அமைத்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதால் அதிகளவு அதிமுக தொண்டர்கள் கூடினர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி விமான நிலைய வளாகத்திற்குள் மேடை அமைத்து, பிளக்ஸ் பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் 6 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.