குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தவர்களுக்கு சிறப்பு பரிசுடன், முதலாம் ஆண்டுக்கான கல்வி செலவு வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு 285 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. இதில் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், நான் சென்னையின் மேயராக இருந்த போது குழந்தை பிறந்தவுடன் தமிழில் பெயர் வைத்தால், தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அப்போது தாய்மார்கள் குழந்தை பிறந்தவுடன் என்ன பெயர் வைத்தால் தங்க மோதிரம் தருவீர்கள் என்று செவிலியர்களிடம் கேட்டனர். இதனை மோதிரத்திற்காக ஆசைப்பட்டு கேட்டதாக எண்ணக்கூடாது. அந்த ஒரு கிராம் மோதிரம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திட போவதில்லை. அதனால் தாய்மார்கள் கேட்டதற்கு காரணம், தாய் வீட்டு சீதனமாக குழந்தை பிறந்தவுடன் சீர் கொடுக்கப்படும். அப்படி தமிழக அரசே தாய்வீட்டு சீதனமாக மோதிரம் அணிந்து வாழ்த்துவது என் குழந்தைக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளில் 5 ஆயிரம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தார்கள்.
அதுபோல் இங்கே உள்ள அனைத்து மகளிருக்கும் மகப்பேறு சுகப்பிரசவமாக நடைபெற வேண்டும். பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும். உங்கள் பட்டியலை நிச்சயம் நான் வாங்கிக் கொள்வேன். இன்னும் 3 அல்லது 4 மாதங்களுக்கு பின் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்வோம். அப்போது பிறந்த குழந்தைக்கு, தமிழில் பெயர் வைத்தால், இதேபோல் 6 மாதங்களுக்கு பின் இன்னொரு நிகழ்ச்சி நடத்தப்படும். 285 பேரும் தங்களின் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் மகிழ்ச்சி. தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஒரு வேண்டுகோள். தமிழில் பெயர் வைத்தால், அந்தக் குழந்தைகளின் முதல் ஆண்டு படிப்பிற்குரிய செலவை சைதையில் உள்ள கலைஞர் கருணை கல்வி மையம் ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மா.சுப்பிரமணியன் கூறுகையில், இந்தியாவில் அதிகளவு சுகப்பிரசவம் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. கர்ப்பிணி பெண்களுக்கு என மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது. குறைபாடு இல்லா குழந்தை தமிழகத்தில் பிறக்க வேண்டும். இறப்பில்லா மகப்பேறு இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதற்காக தான் பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சென்னையில் தெரு நாய்கள் அதிகரிப்பு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு சவாலான ஒன்று. 20, 30 வருடங்களுக்கு முன்பு பிடிக்கப்படும் நாய்கள் கொல்லப்பட்டன. ஆனால் தற்போது பிடிக்கப்படும் நாய்கள் கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் அதே இடத்தில் விடப்படுகிறது. ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படுள்ளது என்று தெரிவித்தார்.