இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர். 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் இந்தோனேசியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா களம் கண்டன. இப்போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர ரசிகர்கள், கடும் கோபமடைந்தனர். கால்பந்து போட்டியில் தங்கள் அணி தோல்வியடைந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆடுகளத்திற்கு சென்றனர். அப்போது களத்தில் இருந்த பல அரேமா வீரர்கள் தாக்கப்பட்டனர். இதை கட்டுப்படுத்த மக்கள் கூட்டத்தின் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை அடுத்து அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கலவரம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர்.
ற்றுக்கணக்கானோர் இந்த கண்ணீர்புகை குண்டுகளுக்கு இடையே சிக்கி மூச்சுவிட முடியாமல் திணறினர். மேலும் பல இடங்களில் பாதுகாப்பு படையினர் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
கால்பந்து ரசிகர்களின் இந்த ரகளை பெரும் ரணகளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மோதலில் தற்போது வரை 127 கால்பந்து ரசிகர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 180 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து எஞ்சிய கால்பந்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.