வீட்டுக்கு போலீஸ் சென்றாலே பயப்படக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் ஒரு தொடை நடுங்கி எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வனவேங்கைகள் கட்சித் தலைவர் இரணியினிடம் நடந்துகொண்ட விதம் ஏற்கத்தக்கதல்ல. அவர் ஏன் இப்படி நடந்துகொண்டார் என்றுத் தெரியவில்லை. வயதாகிவிட்டதால் புத்தி தடுமாறி இப்படி நடந்துகொண்டாரா அல்லது தனக்கு கொம்பு கிம்பு முளைத்துவிட்டதாக அவர் நினைக்கிறாரா. அரசியல் பொதுவாழ்வில் ஆணவமும், அகங்காரமும் இருந்தால் அதனை தமிழக மக்கள் உறுதியாக முறியடிப்பார்கள்.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அவர் சரியான தொடைநடுங்கி. வீட்டுக்கு போலீஸ் போய் நின்றாலே பயப்படக் கூடியவர். எனது சித்தி சசிகலா சிறையிலிருந்த போது எல்லா அமைச்சர்களும் அவரை பார்ப்பதற்காக என்னுடன் வந்த போது எடப்பாடி பழனிசாமி மட்டும் வர மறுத்தார். காரணம் கேட்டால் என் மீதுள்ள வழக்கு காரணமாக எனக்கு சிக்கலாகிவிடும் அதனால் தான் வரவில்லை என அவர் கூறினார். அப்போதே எனது சித்தியிடம், தவறான ஒருவரை முதலமைச்சராக நீங்கள் தேர்வு செய்துவிட்டீர்கள் என நான் கூறினேன்.
ஜெயலலிதா மறைந்ததாலும், எடப்பாடி பழனிசாமி புண்ணியத்தாலும் திமுக ஆட்சிக்கு வர முடிந்தது. ஓசியில் ஆட்சி ஓடிக்கொண்டிக்கிறது. ஓடும் வரை ஓடட்டும் அதை பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை தமிழர்களுக்கு தலைகுணிவை ஏற்படுத்தும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.