ஆர்எஸ்எஸ் இயக்கத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்று, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் முக்கியமான தலைவர்களில் ஒருவர் காமராஜர். தமிழகத்தில் இவர் முதல்வராக இருந்த காலத்தில் தான் பல முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் தான் இப்போது சத்துணவுத் திட்டமாக மாறியுள்ளது. இது பல லட்சம் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வந்தது. இப்படி தமிழகத்திற்குப் பல முக்கிய திட்டங்களைக் கொடுத்துள்ள காமராஜர், 1975ஆம் ஆண்டு அக்.2ஆம் தேதி உயிரிழந்தார். தமிழ்நாட்டிற்குப் பல முன்னோடி திட்டங்களை வழங்கிய அவரது 48வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மாநிலத்தில் இருக்கும் அனைத்து முக்கிய தலைவர்களும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் நினைவகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியே மாநிலத்தின் பொற்காலமாக இருந்தது. ஏழை, எளிய குடும்பங்களில் இருந்து வரும் பிள்ளைகள் எளிதாகக் கல்வி கற்க அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டமே முக்கிய காரணம். அவரது ஆட்சியில் தான் மாநிலத்தில் பல முக்கிய இடங்களில் அணைகள் கட்டப்பட்டன. மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவர் மேற்கொண்ட உட்கட்டமைப்பு பணிகள் முக்கிய காரணமாக அமைந்தது. காமாரஜர் ஆட்சி அவ்வளவு முக்கியமானது.
இன்று நாட்டில் இருக்கும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நாட்டில் அனைத்து வீடுகளில் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தூய்மை நமக்கு எவ்வளவு முக்கியமானது என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இது அனைத்திற்கும் காரணமாகப் பிரதமர் நரேந்திர மோடி தான்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வரலாற்றை அனைவரும் படிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் இயக்கம் ஒன்றும் இன்றோ நேற்றோ வந்த இயக்கம் இல்லை. அது பல லட்சம் தொண்டர்களின் தியாகத்தால் உருவாக்கப்பட்ட மாபெரும் இயக்கமாகும். ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்துப் பேசும் முன், அதன் வரலாற்றைப் படித்துத் தெரிந்து கொண்டு பேச வேண்டும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை யாராலும் ஒழிக்க முடியாது. நேருவே ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஒழிக்க நினைத்தார். ஆனால், அவரால் கூட ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஒழிக்க முடியவில்லை. அவர் மட்டுமில்லை. எந்தவொரு தனிமனிதர் நினைத்தாலும் கூட ஆர்எஸ்எஸ் அமைப்பை யாராலும் ஒழிக்க முடியாது. நாங்கள் நீதிக்கு, தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.