சர்வதேச அகிம்சை தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரெஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்
மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஜூன் 15, 2007இல் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அத்தீர்மானம் பொதுச் சபையில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 2ஆம் தேதியை ஐ.நா. உறுப்பு நாடுகள் உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தியின் பிறந்ததினமான அக்டோபர் 2ஆம் தேதி சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சர்வதேச அகிம்சை தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரெஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “சர்வதேச அகிம்சை தினத்தில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். அத்துடன் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படும் மகாத்மா காந்தி காட்டிய அமைதி, மரியாதை மற்றும் அத்தியாவசிய கண்ணியத்தின் மதிப்புகளையும் கொண்டாடுகிறோம். இவற்றை உள்வாங்கி கலாசாரங்களைக் கடந்து செயல்படுவதன் மூலம் இன்றைய சவால்களை நாம் முறியடிக்க முடியும்.” என்று பதிவிட்டுள்ளார்.
உலக அகிம்சை தினத்தை சர்வதேச மட்டத்தில் கொண்டாட வேண்டுமென எல்லா அரசாங்கங்களையும், ஐ.நா. விற்கு உட்பட்ட கழகங்களையும், அரசு சாரா நிறுவனங்களையும், தனி நபர்களையும் ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளதுடன் இத்தினத்தை பாடத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்ச்சித் திட்டங்கள் மூலமாகவும் அனுசரிக்குமாறும் கோரியுள்ளது.