காந்தியடிகளின் சித்தாந்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது: ஆர்.என்.ரவி

காந்தியடிகளின் சித்தாந்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார்.

காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதைத்தொடர்ந்து ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற தலைப்பில் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இதில், தமிழகத்தில் காந்தியடிகள் வருகை புரிந்த, பங்கேற்ற நிகழ்ச்சிகள் தொடர்பான அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம், கவிதை உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆர்.என்.ரவி பரிசு வழங்கினார். விழாவின் நிறைவில், கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக ஆர்.என்.ரவி பேசியதாவது:-

நவீன இந்தியாவை உருவாக்குவதற்காக தேசப்பிதா காந்தியடிகள் அளப்பரிய, சிறப்பான சேவைகளை வழங்கியவர். அவர் தன்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தார். நாட்டை நன்கு புரிந்துகொண்டதோடு, மக்களின் நாடித்துடிப்பையும் அறிந்து வைத்திருந்தார். பலதரப்பட்ட மக்களையும் அவர் ஒன்றாக இணைத்தார். காந்தியடிகளின் கவலை, நலத்திட்டங்கள் கடைசி மனிதனுக்கும் கிடைக்கவேண்டும் என்பதிலேயே இருந்தது. அவருடைய கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. தனிநபர் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கையில் அது கலங்கரை விளக்கமாக இருக்கிறது.

காந்தி ஜெயந்தியை, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் பங்களிப்போடு நடத்தியதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காந்தியடிகள், தமிழ்நாடு மற்றும் அதன் உயரிய மொழி, பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை மிகவும் விரும்பினார். காந்தியடிகள் அக்டோபர் 2-ந் தேதி (பிறந்த தினம்), ஜனவரி 30-ந் தேதி (நினைவு தினம்) மட்டும் வரையறுக்கக்கூடியவர் அல்ல. அவர் அடிக்கடி கொண்டாடப்பட வேண்டியவர். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மு.பெ.சாமிநாதன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் இயக்குனர் சிவ.சு.சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.