அனைத்து சமூகத்தினருக்கும் சமமாகப் பொருந்தும் வகையில் விரிவான ஆலோசனை நடத்தி மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தினார்.
விஜயதசமி மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிறப்பு பொதுக்கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெற்றது. இதில் புகழ்பெற்ற மலையேறும் வீராங்கனை சந்தோஷ் யாதவ் கலந்து கொண்டார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றில் தலைமை விருந்தினராக ஒரு பெண் கலந்து கொள்ளும் நிகழ்வு இது தான் முதல் முறை என கூறப்படுகிறது. மேலும் மத்திய மந்திரி நிதின் கட்கரி, மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:-
நாட்டில் பெண்கள் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும். பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத்துடன் அதிகாரம் பெற வேண்டும். இன்றைய நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக சந்தோஷ் யாதவ் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
ஜாதிவாரியான மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு ஒரு முக்கிய விஷயமாக இருந்து வருகிறது. அதைப் புறக்கணிப்பதற்கில்லை. மக்கள்தொகையில் காணப்படும் ஏற்றத்தாழ்வு பூகோள ரீதியில் நமது எல்லைகளை மாற்றி அமைக்கும் திறன் வாய்ந்தவை. இந்த ஏற்றத்தாழ்வைப் போக்கும் வகையில் அனைத்து சமூகத்துக்கும் சமமான, பொருந்தக்கூடிய மக்கள்தொகை கட்டுப்பாட்டு கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும். அதன்மூலம் நாட்டில் அனைத்து சமூகத்துக்கும் இடையே சமநிலை ஏற்பட வேண்டும். பிறப்பு விகிதத்தில் உள்ள வேறுபாடு மட்டுமின்றி வலுகட்டயமாக மதமாற்றுதல், ஊடுருவல் போன்றவையும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. மக்கள்தொகையை நாம் கட்டுப்படுத்த முயற்சித்தால் சீனாவில் நிகழ்ந்ததை நாம் இங்கு காண வேண்டிவரும். சீனாவின் ‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’ கொள்கையால் அந்நாடு தற்போது வயதானவர்களின் நாடாக மாறி வருகிறது. ஆனால், இந்திய தேசம் 57 கோடி இளைஞர்களுடன் அடுத்த 30 வருடங்களுக்கு இளைய சமுதாயத்தினரைக் கொண்ட பாரதமாக நீடிக்கும்.
வேலைவாய்ப்புக்குத் திறனை உருவாக்கிக்கொள்ள ஆங்கில மொழி அறிவு முக்கியமானது அல்ல. நமது தாய்மொழியை அரசு மேம்படுத்த வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேர் நமது கையொப்பத்தை தாய்மொழியில் அல்லது பிறமொழியில் இடுகிறோம். மக்கள் அரசுப் பணிகளை மட்டுமே நம்பி இல்லாமல் சொந்தமான தொழில் தொடங்கிட வேண்டும். மக்கள்தொகையில் 30 சதவீதம் பேரைக் கொண்டு அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மீதமுள்ள மக்கள், வேலைவாய்ப்பை உருவாக்க சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும்.
மக்கள்தொகை விஷயத்தில் நமது தேசத்தின் நலன் நமது எண்ணங்களைப் பாதிக்கிறது. இன்று நாம் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக இருக்கிறோம். அடுத்த 50 ஆண்டுகள் இளைஞர்கள் குறைந்து முதியவர்கள் அதிகம்பேர் இருப்பார்கள். நமது இளைய சமுதாயம் எந்த அளவு இருக்க வேண்டும் என்பதையும் நாம் கவனித்து செயல்பட வேண்டும். குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது தாய்வழி ஆரோக்கியம், கல்வி, நிதி நிலை, தனிநபர் ஆரோக்கியம் ஆகியவற்றை சார்ந்து உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் தேவைகளையும் இது சார்ந்துள்ளது. மக்கள்தொகை சுற்றுச்சூழலையும் பாதிக்கச் செய்யும்.
இந்த அனைத்து விஷயங்களையும் மனதில் கொண்டு மக்கள்தொகை கொள்கையை அரசு வகுக்க வேண்டும். அது அனைவருக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும். இதுதொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிறுபான்மையினருக்கு ஆபத்து இருப்பதாக சிலரால் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், அதுபோன்ற செயலை ஹிந்துக்களோ ஆர்எஸ்எஸ் அமைப்பு செய்வதில்லை. ஆர்எஸ்எஸ் மக்களின் நம்பிக்கை மற்றும் கவனத்தைப் பெற்று வலுவடைந்து வருகிறது. ஹிந்து தேச கொள்கை மிக தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பலர் இக்கொள்கையை ஏற்றுக் கொண்டனர். ஆனால், அவர்கள் ஹிந்து என்ற சொல்லை மட்டும் எதிர்க்கிறார்கள். அதற்குப் பதிலாக வேறு சொல்லை பரிந்துரைக்கிறார்கள். இந்த விஷயத்தில் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இக்கொள்ûகையை மக்களிடம் தெளிவுபடுத்த நமக்கு நாமே ஹிந்து என்ற சொல்லை வலியுறுத்தி வருவோம்.
ஹிந்துகளாளோ அல்லது நமது அமைப்பாலோ சிறுபான்மையினருக்கு ஆபத்து ஏற்படும் என சிலரால் தூண்டிவிடப்படுகிறது. ஆனால், அதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் நிகழவில்லை. எதிர்காலத்திலும் நிகழாது. இதுவே ஹிந்துக்களின் அல்லது இந்த அமைப்பின் இயற்கை குணமாகும். வரலாறு இதை வெளிப்படுத்தும். வெறுப்பை உருவாக்குதல், அநீதி ஏற்படுத்துதல், கொடுமை செய்தல் போன்ற செயல்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.