நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்: திருமாவளவன்!

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

தெலுங்கானாவில் ராஷ்ரிய சமிதியின் தேசிய கட்சி தொடக்க விழாவில் கலந்துகொண்டேன். அது ஜனநாயக சக்திகள் மதவாத சக்திகளுக்கு எதிராக ஒரு அணியில் திரள நடைபெற்ற கூட்டமாகும். கர்நாடகத்திலிருந்து குமாராசாமி மற்றும் தேசிய அளவிலான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மண்டல் கமிஷன் தலைவர் விபி மண்டல், பகுஜன் சமாஜ் தலைவர் கான்சிராம் அவர்களுக்கு சிலை வைக்க கோரிக்கை விடுத்தேன். வரும் 2024ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து ஜனநாயக சக்திகளும் வாக்குகளை சிதறாமல் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் துணை நிற்போம்.

சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம், குறிஞ்சான்குளம் பகுதிகளில் ஊர் கட்டுபாடு என்ற பெயரில் சாதியின் பெயரால் சமுக புறக்கணிப்பை நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும். 25 ஆண்டுகள் நடைபெற்ற சாதிய கொடுமைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது. அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

கோவையில் நாளை நடைபெறும் எனது மணிவிழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து செயல்படுகிறதோ அதே போல் பிற மாநிலங்களிலும் செயல்பட வேண்டும் என விடுதலை சிறுத்தை சார்பில் வலியிறுத்துகிறோம்.

இன்றைய தமிழ் சமுகத்தில் தமிழ் சமூகம் சமஸ்கிருத சக்திகளால் திணிக்கப்படுகிறது என்பதை இயக்குநர் வெற்றிமாறன் கூறினார். திருவள்ளுவர் சிலைக்கு காவி உடுத்துவது, ராஜராஜ சோழனை இந்து என அடையாளப்படுத்துவது ஆபத்தானது. இத்தகைய போக்கு வன்மையாக கண்டனத்திற்குரியது. இந்து சமய அறநிலையத்துறையை சைவ சமய அறநிலையத்துறை என்றும் வைணவ சமய அறநிலையத்துறை என்றும் பெயர் மாற்ற வேண்டும்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலங்கள் நிகழ்கின்றன. அதனைத் தடுப்பதற்கான முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இளம் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என அரசுக்கு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.