கர்நாடகாவில் ராகுலுடன் கைகோர்த்த கவுரி லங்கேஷ் குடும்பத்தினர்!

கர்நாடகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் குடும்பத்தினர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

2024 நாடாளுமன்ற தேர்தல் பணியை காங்கிரஸ் கட்சி துவங்கி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 17 ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல்காந்தி துவங்கி உள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறுகிறது. சுமார் 3,500 கிலோமீட்டர் தொலைவுக்கு ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 7 ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் துவங்கிய இந்த பாத யாத்திரை கேரளாவை கடந்து தற்போது கர்நாடகத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன், சோனியா காந்தி பங்கேற்றார். இதனால் கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், தலைவர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த வேளையில் ராகுல் காந்தி பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து வருகிறார். மேலும் ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளிக்கின்றனர். பெண்கள், சிறுவர், சிறுமிகள், முதியவர்கள் என அனைவரும் அவருடன் கைக்கோர்த்து நடைப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் நேற்று கர்நாடகாவில் மண்டியா மாவட்டத்தில் நடைப்பயணம் துவங்கியது. கே மல்லேனஹள்ளி கிராமத்தில் துவங்கிய நடைப்பயணம் அஞ்சே சிட்டனஹள்ளியில் முடிவடைந்தது. அதன்பிறகு மாலையில் அஞ்சே சிட்டனஹள்ளியில் துவங்கிய நடைப்பயணம் பேலூர் டவுன் சென்றடைந்தது. இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் மறைந்த பத்திரிகையாளரான கவுரி லங்கேஷின் குடும்பத்தினர் நேற்று பங்கேற்றனர்.

கவுரி லங்கேஷின் தாய் இந்திரா லங்கேஷ், சகோதரி கவிதா லங்கேஷ் ஆகியோர் ராகுல் காந்தியின் கைகோர்த்து நடைப்பயணம் செய்தனர். முன்னதாக இந்திரா லங்கேஷ், ராகுல் காந்தியை அரவணைத்து நடைப்பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான படத்தை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‛‛கவுரி உண்மையின் பக்கம் நின்றார். கவுரி தைரியத்திற்காக நின்றார். கவுரி சுதந்திரத்துக்காக நின்றார். நான் கவுரி லங்கேசுக்காகவும், இந்தியாவின் உண்மையான உணர்வை பிரதிநிதித்துவம் செய்யும் அவரை போன்ற மற்றவர்களுக்காகவும் இருக்கிறேன். பாரத் ஜோடோ யாத்திரை என்பது அவர்களின் குரல். இதனை ஒருபோதும் அடக்க முடியாது” என கூறியுள்ளார்.

பெங்களூரை சேர்ந்த பெண் பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் இருந்தவர் கவுரி லங்கேஷ். சமூக செயற்பாட்டாளராக இருந்த இவர் 2017 ல் அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். 2013ல் மகாராஷ்டிரா புனேவில் நரேந்திர தபோல்கர், 2015ல் கோலாப்பூரில் கோவிந்த் பன்சாரே, அதே ஆண்டு கர்நாடகத்தில் பேராசிரியர் எம்எம் கல்புர்கி ஆகியோரை தொடர்ந்து கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது. சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவர்கள் 4 பேரும் சனாதானம், சாதி அமைப்பு, இந்துத்துவ அரசியல், மூடப்பழக்க வழக்கம் ஆகியவற்றை கடுமையாக எதிர்த்த நிலையில் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.