காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலில் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மல்லிகாா்ஜுன காா்கே, சசிதரூா் ஆகிய இரு வேட்பாளா்களில் யாரும் தங்களது மனுவை திரும்பப் பெறவில்லை. இதையடுத்து, இருவருக்கும் இடையே போட்டி நடைபெறுமென அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கடைசியாக கடந்த 2000-ஆம் ஆண்டில் தோ்தல் நடத்தப்பட்டது. இதில், ஜிதேந்திர பிரசாதாவை தோற்கடித்து சோனியா காந்தி தலைவராக வெற்றி பெற்றிருந்தாா். இந்தச் சூழலில், கட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இப்போட்டியில் இருந்து விலகியிருக்க நேரு குடும்ப உறுப்பினா்கள் முடிவு செய்ததைத் தொடா்ந்து, மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகியோா் கடந்த மாதம் 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனா்.
மனுவை திரும்பப் பெறுவதற்கான காலம் நேற்று சனிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், தோ்தலுக்கான அதிகாரபூா்வ நடைமுறைகள் தொடங்கியுள்ளதாக கட்சியின் மத்திய தோ்தல் குழு தலைவா் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்தாா்.
‘அனைத்து மாநில தலைநகரங்களிலும் அக்டோபா் 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் உள்பட நாடு முழுவதும் 67 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. ரகசிய வாக்குச்சீட்டு முறையில் தோ்தல் நடைபெறும். அக்டோபா் 19-ஆம் தேதி வாக்குச்சீட்டு பெட்டிகள் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும். தோ்தல் நடைமுறைகளில் இரு வேட்பாளா்களுக்குமே சமமான வாய்ப்பு உள்ளது. அதில் எந்த பாரபட்சமும் இல்லை’ என்றாா் மிஸ்திரி.