கிரீமிய தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கிய பாலத்தை உக்ரைன் தகர்த்துள்ளது
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனின் ஏராளமான இலக்குகளை குறி வைத்தும், அந்நாட்டின் நகரங்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வழங்கி வருகின்றன. உக்ரைந் ரஷ்யா இடையேயான போர் கடந்த 8 மாதங்களாக நீடித்து வருகிறது. மேலும், உக்ரைனின் 4 நகரங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டுள்ளது. இதனிடையே உக்ரைனின் முக்கிய நகரான கார்கீவ்வில் நேற்று பல்வேறு இடங்களில் ரஷ்ய படைகள் திடீரென சரமாரியாக குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. இதில், முக்கிய மருத்துவ நிறுவனம் உள்பட பல்வேறு கட்டங்கள் தீக்கிரையாகின. உயிரிழப்புகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கிரீமிய தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கிய பாலத்தை உக்ரைன் தகர்த்துள்ளது. பாலத்தின் மீது வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி வெடிக்க வைக்கப்பட்டு பாலம் தகர்க்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனால், அந்த பாலத்தில், ரயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீட்புபணிகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, பாலத்தின் ஒரு பகுதி போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் கிரிமீயா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. அதன்பின்னர், ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உத்தரவின் பேரில், கிரீமிய தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் 2018ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் ரயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பாலம் ரஷ்யாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கிறது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்தே, இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது
லாரியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யாவின் தேசிய பயங்கரவாதத் தடுப்புக் குழு தெரிவித்தது. இந்த குண்டுவெடிப்பு காரணமாக, சாலைப் பாலத்தையொட்டிய ரயில் பாலத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 7 எரிபொருள் பெட்டிகளில் தீப்பற்றி, அந்தப் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததாக அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பின்போது அந்தப் பாலம் வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு ஆண், ஒரு பெண் உயிரிழந்ததாகவும் அவா்களது சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய புலனாய்வுக் குழு தெரிவித்தது. எனினும், சம்பவத்தில் உயிரிழந்த 3-ஆவது நபா் யாா், குண்டுவெடிப்பில் ஈடுபடுத்தப்பட்ட லாரியின் ஓட்டுநா் நிலைமை என்ன என்பது போன்ற விவரங்களை விசாரணைக் குழு வெளியிடவில்லை.
குண்டுவெடிப்பில் ரஷ்யா – கிரீமியா பாலம் சேதமடைந்தது ரஷ்யாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு உக்ரைனின் பயங்கரவாதச் செயல் என்றும், அந்த நாட்டுக்கு எதிரான பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை அதிபா் விளாதிமீா் புதின் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் பல்வேறு எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
லாரி குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதலாகவும், உக்ரைன் மீதான நடவடிக்கை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான நடவடிக்கையாகவும் அறிவிக்கப்பட்டால், உக்ரைன் போருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவா்கள் மீது அதிகாரிகள் மேலும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட முடியும் என்று அஞ்சப்படுகிறது.
ரஷ்யாவுக்கும் கிரீமியாவுக்கும் இடையிலான பாலம் குண்டுவெடிப்பில் சேதமடைந்துள்ளது குறித்து உக்ரைன் அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனா். கடந்த மே மாதத்தில் ரஷ்யாவின் தலைமை போா்க் கப்பலான மாஸ்க்வா மூழ்கடிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் உக்ரைன் அஞ்சல் துறை சிறப்பு தபால் தலையை வெளியட்டது. அதைப் போலவே, ரஷ்யா – கிரீமியா பாலம் சேதமடைந்ததைக் கொண்டாடும் வகையிலும் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனா். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம், பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டமைப்பு சேதமடைந்ததை உக்ரைன் கொண்டாடுவது, அந்த நாட்டின் பயங்கரவாதத் தன்மையைப் புலப்படுத்துகிறது என்று சாடியுள்ளது.