கரூரில் சாலை போடாமலேயே கோடிக்கணக்கில் பணம் கையாடல்: டிடிவி தினகரன்

கரூரில் சாலை போடாமலேயே கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்காமல் தனியார் நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் சார்பில் தலைமை செயலரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து நடந்த விசாரணையில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. அதாவது கரூர் என்.புதூர், புகழூர் சர்க்கரை ஆலை சாலை, வால்காட்டுப்புதூர் உட்பட 4 இடங்களில் சாலை அமைக்காமலேயே சாலை அமைத்ததாக கணக்கு காட்டி ரூ.3 கோடி வரை முறைகேடு நடந்தது தொடர்பாக கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமா உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்னும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

கரூரில் சாலை போடாமலேயே திமுக ஆட்சியில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வெளியாகியிருக்கும் புதிய ஆதாரங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் உரிய விளக்கம் அளிப்பார்களா?. இந்த முறைகேட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை காப்பாற்ற முயற்சிப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள், இது ஒரு கூட்டு கொள்ளையோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திற்கே ரூ.100 கோடிக்கு மேல் டெண்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது திமுக ஆட்சியில் எந்த அளவிற்கு ஊழல் மலிந்து போயிருக்கிறது என்பதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது. ‘சர்க்காரியா புகழ்’ திமுகவினர் கரூரில் சாலை போடாமலேயே மக்கள் பணத்தை சுரண்டியதைப் போல இன்னும் என்னென்ன திருவிளையாடல்களை அரங்கேற்றுகிறார்களோ?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.