உ.பி.,யில் அமெரிக்காவுக்கு இணையான சாலை உட்கட்டமைப்பு: நிதின் கட்கரி

2024-ம் ஆண்டு முடிவதற்குள், உ.பி.,யில் அமெரிக்காவுக்கு இணையாக சாலை உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

இது குறித்து,மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பதாவது:-

2024-ம் ஆண்டு முடிவதற்குள், உ.பி யில் அமெரிக்காவுக்கு இணையாக சாலை உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக, உத்தர பிரதேசத்தில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்ட பணிகள் நடைபெறும். அரசாங்கத்திடம் தரமுள்ள சாலைகளை அமைப்பதற்கு பண பற்றாக்குறை இல்லை.

உ.பி.யில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் சாலை கட்டுமானத்திற்கு, தேவையான பொருட்களை பயன்படுத்துவதே, தற்போதைய காலத்தின் தேவை ஆகும். பொருளாதாரத்துடன், சுற்றுச்சூழலிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக சிஎன்ஜி, எத்தனால், மெத்தனால் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களைப் மக்கள் பயன்படுத்த வேண்டும். இன்று நாம் ஒரு லட்சம் லிட்டர் பயோ எத்தனாலை தயாரித்து, அதிலிருந்து பயோ-சிஎன்ஜி தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.