சிவ சேனா கட்சிக்கு தீப்பந்தம் சின்னம் ஒதுக்கீடு!

சிவ சேனா கட்சிக்கு தீப்பந்தம் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்கள் 40 பேருடன் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் மஹாராஷ்டிரா சட்ட சபையில் பெரும்பான்மையை இழந்ததால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவ சேனாவை சேர்ந்த அதிருப்தியாளர்கள் குழு பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மஹாராஷ்டிர மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் ஆகியோர் பொறுப்பேற்று உள்ளனர்.

இதற்கிடையே மும்பை அந்தேரி கிழக்கு தொகுதியை சேர்ந்த சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லாத்கே சமீபத்தில் மறைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆளும் சிவசேனா அதிருப்தி குழு-பாஜ கூட்டணி சார்பில் முர்ஜி படேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சிவ சேனா கட்சியின் சார்பில் மறைந்த ரமேஷ் லாத்கே மனைவி ருத்துஜா லாத்கே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். சிவ சேனா கட்சி பிளவுப்பட்ட பிறகு முதல் முறையாக இரண்டு அணிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. எனவே இதில் வெற்றி பெற 2 தரப்பும் தீவிரமான முயற்சியில் இறங்கி உள்ளன.

இந்த நிலையில் யார் உண்மையான சிவசேனா? யாருக்கு வில் அம்பு சின்னம்? என்பது குறித்து இரு தரப்பும் மனு தாக்கல் செய்தது. இரு தரப்பு மனுக்களையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக விசாரித்து நிலையில் திடீரென சிவசேனா கட்சியின் வில்-அம்பு சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து வில் அம்பு சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் விதித்த தடையை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே மனு தாக்கல் செய்து இருக்கிறார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனுவில், 2 தரப்பின் வாதங்களை கூட கேட்காமல் தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னத்தை முடக்கி உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்தநிலையில் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தவ் தாக்கரே மனு மீது எந்த முடிவும் எடுக்க கூடாது என ஏக்நாத் ஷிண்டே தரப்பும் டெல்லி ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு அவசர வழக்காக தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தேர்தலை முன்னிட்டு தற்காலிக தீர்வாக உத்தவ் தாக்கரே தரப்பில் தீப்பந்தம், திரிசூலம், உதயசூரியன் ஆகிய 3ல் ஒரு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தார்.

இதே போல சிவசேனா பாலாசாகேப் பிரபோந்த்கர் தாக்கரே, சிவசேனா பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே ஆகிய பெயர்களில் ஒன்றை தங்களது அணிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில் உத்தவ் தாக்கரே அணியினருக்கு தீப்பந்தம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. மேலும், சிவ சேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே என்கிற பெயரையும் ஒதுக்கித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சிவசேனா கட்சி சின்னம், பெயர் முடக்கியது குறித்து முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்த அவர் தனது டுவிட்டர் பதிவில், “பணத்திற்கு விலைபோன துரோகிகள் சிவசனோ பெயரையும், சின்னத்தையும் முடக்கும் வெட்கக்கேடான மற்றும் கீழ்த்தரமான செயலை செய்துள்ளனர். இதை மராட்டிய மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் போராடி வெற்றி பெறுவோம். உண்மையின் பக்கம் நாங்கள் இருக்கிறோம். சத்யமேவ ஜெயதே” என கூறியுள்ளார்.