50 ஆண்டுகளாக கட்சியில் இருப்பவர்களை கவுரவப்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொன்விழா நிறைவையொட்டி, 50 ஆண்டுகளாக கட்சியில் இருப்பவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. 50 ஆண்டுகளை கடந்து, 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி கட்சியின் பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி சார்பில் நடத்தப்பட உள்ள நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்த மாவட்ட செயலாளர்கள் – நிர்வாகிகள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

வருகிற 17-ந் தேதியன்று கட்சியின் பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும். மாவட்டந்தோறும் மாபெரும் பொதுக்கூட்டங்களை நிர்வாகிகள் நடத்த வேண்டும். அந்த விழாவில் கட்சி தொடங்கி இன்றுவரை அதாவது 50 ஆண்டுகளாக இருக்கும் நிர்வாகிகளை நீங்கள் கவுரவப்படுத்திட வேண்டும். இதனை நிர்வாகிகள் மிக சிறப்பாக செய்திட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. எனவே பூத் கமிட்டி அமைக்க வேண்டும். நிர்வாகிகள் மக்களை தேடிச்சென்று அ.தி.மு.க. அரசு செய்த சாதனைகளை எடுத்து சொல்லவேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். எனவே தி.மு.க. அரசின் இந்த மோசடி குறித்தும் மக்களிடம் எடுத்து சொல்லவேண்டும். இது மிகப்பெரிய அளவிலான பிரசாரமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.