ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கோபமடைந்த உக்ரைன், ஐ.நா அவசர பொதுக்கூட்டத்தில் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சர்வதேச அரசியல் களத்தில் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ரஷ்யா படைக்கு புதிய தளபதி, கிரீமியா பாலம் மீது தாக்குதல், உக்ரைன் மீது 75 ஏவுகணைகளை விட்டு ரஷ்யா நடத்திய தாக்குதல் என நிலவரம் கலவரமான சூழலில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் உக்ரைனுக்கு சொந்தமான 4 மாகாணங்களை தங்களுடன் இணைத்துக் கொண்டதாக ரஷ்யா அறிவித்ததற்கு சர்வதேச அளவில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதுபற்றி விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கால சிறப்பு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் உக்ரைன் தலைநகர் கீவ் நகர் மீது ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதல் நடத்தி ஒட்டுமொத்தமாக புரட்டி போட்டுள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஐ.நாவிற்கான உக்ரைன் தூதர் செர்ஜி கைஸ்லைட்சியா, ரஷ்யா தான் ஒரு பயங்கரவாத நாடு என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டது என்று ஆக்ரோஷமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். மேலும் பேசுகையில், இப்படியொரு சர்வாதிகார தலைமை இருக்கும் வரையில் அமைதியையோ அல்லது போர் நிறுத்தத்தையோ என எதையும் எதிர்பார்க்க முடியாது. எங்கள் மீதான தொடர் தாக்குதல்களில் 14 பேர் பலியாகியுள்ளனர். 97 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஐ.நாவிற்கான ரஷ்ய பிரதிநிதி வசிலி நெபென்ஸ்யா, கிழக்கு உக்ரைனில் உள்ள எங்கள் சகோதர, சகோதரிகளை பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால் இதை பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமை. அவர்கள் என்ன மொழியை பேச வேண்டும். தங்கள் பிள்ளைகளுக்கு என்ன மொழியை கற்று தர வேண்டும் என்பதில் அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது என்று கூறினார்.
பின்னர் பேசிய ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டெரஸ், ரஷ்யாவின் தாக்குதலை முற்றிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் உக்ரைனின் 4 நகரங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டுள்ளதை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ரஷ்யா ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை வைத்தது. ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை மீதான வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது. வாக்கெடுப்பின் முடிவில் ரஷ்யாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மொத்தம் 193 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற அந்த வாக்கெடுப்பில் இந்தியா உள்பட 107 நாடுகளின் பிரதிநிதிகள் ரஷ்யாவின் கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தனர். ரஷ்யாவின் கோரிக்கைக்கு ஆதரவாக 13 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. மீதமுள்ள 39 நாடுகள் வாக்களிக்கவில்லை. ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் வாக்களிக்கவில்லை. இதையடுத்து, ரகசிய வாக்கெடுப்பு கோரிய ரஷ்யாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன், பதிவு செய்யப்பட்ட வாக்கெடுப்பு நடத்துவது என ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை எதிர்த்து ரஷ்யா மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்போதும், இந்தியா உள்பட 100 நாடுகள் ரஷ்யாவின் கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தன.
இதையடுத்து, அல்பேனியா கொண்டு வந்த அந்த தீர்மானத்தின் மீது பதிவு செய்யப்பட்ட வாக்கெடுப்புக்கு ஏற்றுக்கொள்வதற்கான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரஷ்யா கோரியது. ஆனால், 16 நாடுகள் ஆதரவாகவும், 34 நாடுகள் வாக்களிக்காமலும் இருந்த நிலையில், பெரும்பாலான நாடுகள் மறுபரிசீலனைக்கு எதிராக வாக்களித்த காரணத்தால் மறுபரிசீலனை செய்ய வேண்டாம் என்று ஐ.நா., பொதுசபை முடிவு செய்து அறிவித்தது.