ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எப்போதும் தடை விதிக்கணும்: திருமாவளவன்

தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலை சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலை சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுக்க நடந்த இந்த நிகழ்வில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மதத்தின் அடிப்படையில் பகை ஏற்படுத்தவும் அமைதியைச் சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளையும் அனுமதிக்க மாட்டோம் என்பதை வலியுறுத்தி விசிக இந்த மனித சங்கிலி நடைபெற்றது.

விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “சனாதன சக்திகளுக்கு எதிராக வரலாற்றில் இல்லாத அளவிற்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். அவர்கள் நினைப்பதைப் போல ஏமாளிகள் இருக்கும் மாநிலம் அல்ல, இது பெரியாராலும் அண்ணாவாலும் திராவிட இயக்கங்களாலும் பண்படுத்தப்பட்ட மண். சாதி, மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் சங்பரிவார் சதி வலைகளை முறியடிப்போம். சனாதன சக்திகளால் இங்குக் காலூன்ற முடியாது. ஆர்எஸ்எஸ் என்பது ஒரு சராசரி ஜனநாயக இயக்கம் இல்லை. ஆர்எஸ்எஸ் அணி வகுப்பிற்குத் தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. அப்படி அனுமதி அளித்தால் அதை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்” என்றார்.

திராவிட கழகம் தலைவர் வீரமணி பேசுகையில், “தமிழ்நாடு பெரியார் மண்.. மதவாதத்திற்கு இடம் தராத மண் என்று இன்று உணர வைத்துள்ளது. இது ஆர்எஸ்எஸ்-க்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். தமிழ் மண்ணில் ஆர்எஸ்எஸ்-ஐ ஒருபோதும் நுழைய விட மாட்டோம். நச்சு கிருமிகள் உள்ளே நுழைந்து மதவாதத்தைப் பரப்பி வன்முறையைத் தூண்ட முயன்றால் அதைத் தடுப்போம். இது முடிவல்ல தொடக்கம்” என்று பேசினார்.

அதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “தொல்.திருமாவளவன் எடுத்த முயற்சியால் இந்த மனிதச் சங்கிலி அறப்போர் வெற்றிகரமாக நடந்துள்ளது. சாதி, மதங்களின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த முயலும் கும்பலுக்கு இங்கு இடமில்லை. தமிழ்நாட்டில் சனாதன சக்திகள் காலூன்ற முடியாது காலூன்ற விடமாட்டோம் சனாதன சக்திகளை வேரோடு சாய்க்கப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்போம்” என்றார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் பேசுகையில், “தமிழ்நாட்டில் மதவாத, சாதிய கும்பலுக்கு இடமில்லை. மதத்தின் பெயரால் மனிதத்தை கூறுபோடுகின்ற ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பலுக்குத் தமிழகத்தில் இடமில்லை. அதைத் தான் இந்த மனிதச் சங்கிலி போராட்டம் காண்பித்து உள்ளது. தமிழகம் சமூகநீதி மண் என்று நிரூபிக்கும் வகையில் அனைவரும் ஒன்றாகப் பயணிப்போம்” என்றார்.