கேரளா பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
கேரள சாலைகளில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த பத்மா, கலடி பகுதிகளைச் சோ்ந்த ரோஸிலின் ஆகியோர் கடந்த ஜூன் மாதத்திலும், செப்டம்பரிலும் காணாமல் போனதாக வந்த புகார்கள் மீது போலீசரார் விசாரணை நடத்தியபோது, அவா்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது. செல்வம் பெருக நரபலி கொடுக்க வேண்டும் என்று பெரம்பவூரைச் சோ்ந்த முகமது சபி என்பவா் கூறியதைக் கேட்டு, திருவல்லாவைச் சோ்ந்த பகவல் சிங் – லைலா தம்பதி, அவா்களின் வீட்டில் வைத்து அந்த இரு பெண்களையும் கொலை செய்து, எலந்தூா் கிராமத்தில் புதைத்துள்ளனா்.
இந்நிலையில், சபி மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருப்பதால், வேறு யாரையாவது நரபலி கொடுத்துள்ளாரா என்ற கோணத்தில் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணையை துவக்கியுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மட்டும் 15 பெண்கள் மாயமாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பத்மாவும், ரோஸிலினும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 பேரின் நிலை இதுவரை மர்மமாகவே இருக்கிறது. நாடு முழுவதும் நரபலி விவகாரத்தை கவனித்து வரும் நிலையில், மேலும் 12 பெண்கள் குறித்த மர்மம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கிய குற்றவாளி சபி மற்றும் பகவல் சிங், லைலா ஆகியோரை 12 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து கொச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் காவல் ஆணையா் நாகராஜு கூறியதாவது:-
இந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவு மூலமாகவே துப்புதுலங்கியது. கொலை செய்யப்பட்ட பெண்களில் ஒருவரை முகமது சபி தனது காரில் ஏற்றுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தை வைத்து காவல் துறையினா் மேற்கொண்ட தொடா் விசாரணையில், இந்த கொலை சம்பவத்தின் முழு விவரமும் வெளிவந்தன. முக்கியக் குற்றவாளியான சபி மீது ஏற்கெனவே திருட்டு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் 10-க்கும் அதிகமான வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 75 வயது மூதாட்டியை சபி பாலியல் துன்புறுத்தல் செய்து, அவரது உடலின் பல பகுதிகளில் கத்தியால் காயங்களை ஏற்படுத்திய வழக்கும் அடங்கும். தற்போது எலந்தூரில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் உடலிலும் அதேபோன்ற காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சபி அடிப்படையில் வக்கிர புத்தி உடையவா். பெண்களிடம் ஏதாவது கதையைச் சொல்லி, அவா்களை தனது வலையில் விழவைத்து பின்னா் அவா்களைத் துன்புறுத்தி வந்துள்ளாா். இவ்வாறு அவர் கூறினார்.