இங்கிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டின் அஸ்திவாரத்தில் 240 பேரின் எலும்பு கூடு!

இங்கிலாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டின் அஸ்திவாரத்தில் 100 குழந்தைகள் உட்பட 240 பேரின் எலும்பு கூடுகள் சிக்கியதால், தொல்பொருள் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்து நாட்டின் ஹாவர்போர்ட்வெஸ்டில் இருந்த சூப்பர் மார்க்கெட் கடந்த 2013ம் ஆண்டு முதல் மூடப்பட்டு கிடக்கிறது. தற்போது அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரை மேம்படுத்துவதற்காக அதனை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது. அப்போது அஸ்திவாரத்தை தோண்டும் போது, மனித எலும்பு கூடுகள் ஆங்காங்காங்கே கிடந்தன. அதிர்ச்சியடைந்த கட்டுமானப் பணியாளர்கள் உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புலனாய்வு அமைப்பினர் மேற்பார்வையில் டிபார்ட்மென்ட் ஸ்டோரின் அஸ்திவாரத்தை மேலும் பல அடிகள் தோண்டினர். அப்போது 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் எலும்பு கூடுகள் உட்பட 240க்கும் மேற்பட்டவர்களின் எலும்பு கூடுகள் கிடந்தன.

இதுகுறித்து தொல்பொருள் அறக்கட்டளையின் மேற்பார்வையாளர் ஆண்ட்ரூ ஷோப்ரூக் கூறுகையில், ‘‘300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் சுடுகாடாக இருந்திருக்கலாம். கைப்பற்றப்பட்ட எலும்புக் கூடுகளை ஆய்வு செய்த போது, அந்த எலும்பு கூடுகளின் உடல்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிலவற்றின் தலையில் காயங்கள் உள்ளன; இவை போர்க் காயங்களுடன் ஒத்துப்போகின்றன. இதுவரை 240 பேரின் எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் எலும்பு கூடுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த 1405ம் ஆண்டில் அப்போதைய அரசன் ஓவைன் க்ளின்டோர் தலைமையிலான பிரெஞ்சு மற்றும் வெல்ஷ் படைகளின் தாக்குதலால், இவர்கள் பலியாகி புதைக்கப்பட்டிருக்கலாம். இங்கிலாந்து வரலாற்றில் இதுவரை இவ்வளவு பெரிய புதைக்குழியை பார்த்ததில்லை. கிட்டதட்ட 18ம் நூற்றாண்டு வரை இந்த இடம் சுடுகாடாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. வரும் ஜனவரி வரை தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும்’’ என்றார்.