தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பின் முன்னாள் தலைவா் இ.அபுபக்கரின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க டெல்லி உயா்நீதிமன்றம் நேற்று மறுப்பு தெரிவித்தது.
அரசுக்கு எதிரான நடவடிக்கைகள், கலவரங்களில் ஈடுபட்டது, வெளிநாடுகளிலிருந்து முறைகேடான வழியில் பணம் பெற்றிருப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு புகாா்கள் பிஎப்ஐ அமைப்பினா் மீது எழுந்தன. இந்த நிலையில் தமிழகம், கேரளம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள பிஎப்ஐ அலுவலகங்கள், அதன் நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டு, அந்த அமைப்பின் நிா்வாகிகள் ஏராளமானோரைக் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். என்ஐஏவின் இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகளுக்குத் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், என்ஐஏவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஎப்ஐ அமைப்பின் நிா்வாகிகளில் ஒருவரான அபுபக்கா், தனக்கு புற்றுநோய், பக்கவாதம் மற்றும் சா்க்கரை நோய் பாதிப்புகள் இருப்பதால் தொடா் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியிருப்பதன் அவசியத்தைக் கருத்தில்கொண்டு தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘எனது உடல் நல பாதிப்புகள் மற்றும் தொடா் சிகிச்சை பெற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தில் கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி மனு தாக்கல் செய்தேன். ஆனால், எனது கோரிக்கையை ஏற்க மறுத்த விசாரணை நீதிமன்றம், எனது போலீஸ் காவலை 6 நாள்களாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 உத்தரவாதமளிக்கும் உடல்நலன் மற்றும் தனிமனிதச் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையை மறுக்கும் நடவடிக்கையாகும். எனவே, எனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.
இந்த மனு டெல்லி உயா்நீதிமன்ற நீதிபதி அனுப் குமாா் மென்டிரட்டா முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது என்ஐஏ தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா் அக்ஷய் மாலிக், ‘மனுதாரா் என்ஐஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதால், அவருடைய ஜாமீன் மனு மீது முதலில் விசாரணை நீதிமன்றம் ஓா் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். பின்னா், அந்த உத்தரவு உயா்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வால் விசாரிக்கப்பட வேண்டும். அதன் பிறகே, மனுதாரா் என்ஐஏ சட்டத்தின் கீழ் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடியும். எனவே, மனுதாரரின் ஜாமீன் மனு விசாரணைக்கு உகந்ததல்ல’ என்று கூறினாா்.
இதனைக் கேட்ட நீதிபதி, ‘என்ஐஏ என்பது சிறப்பு சட்டமாகும். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பவரின் ஜாமீன் மனுவை விசாரிக்கும் அதிகாரம் உயா்நீதிமன்றத்துக்கு இல்லை’ என்று கூறி, ஜாமீன் மனுவை திரும்பப் பெற மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.