ஞானவாபி மசூதி வழக்கு: இந்து அமைப்புகளின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு!

ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் போன்ற உருவத்தின் காலத்தை நிர்ணயிக்க கார்பன் சோதனை மற்றும் அறிவியல் ரீதியான ஆய்வு நடத்த வேண்டும் எனக் கோரிய இந்து அமைப்புகளின் கோரிக்கையை வாரணாசி நீதிமன்றம் நிராகரித்தது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ் பெற்ற காசி விசுவநாதர் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிருங்கார் கவுரி அம்மன் உள்ளிட்ட இந்து கடவுள்களின் உருவங்களை ஆண்டு முழுதும் வழிபட அனுமதி கோரி, ஐந்து இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த வாரணாசி சிவில் நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில், ‘வீடியோ’ பதிவுடன் கள ஆய்வு செய்ய உத்தரவிட்டது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, மசூதி வளாகத்தில் மே மாதத்தில் ஆய்வு செய்தது. அப்போது, மசூதியில் உள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய, சிவலிங்கத்தை கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு உட்படுத்தவும், அறிவியல் பூர்வமான ஆய்வுக்கும் உட்படுத்த வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில், இந்து அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.

இந்த நிலையில், கார்பன் பரிசோதனை தொடர்பான மனு நீதிபதி ஏ.கே.விசேஷா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்பன் பரிசோதனை குறித்த மனு மீதான கருத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய ஞானவாபி மசூதியை நிர்வகித்து வரும் இஸ்லாமிய அமைப்பிற்கு உத்தரவிட்டார். அதன் பின், இந்து மத கடவுள் சிவலிங்கத்தின் உண்மை வயதை கண்டறிய கார்பன் பரிசோதனை நடத்த கோரிய இந்து அமைப்பின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.