சிதம்பரம் தீட்சிதர்கள் 4 குழந்தை திருமணத்தை செய்து வைத்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் ஒரு குழந்தை திருமணத்தில்தான் தற்போது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தனது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் வைக்கப்பட்டது. கடந்த வருடம் தனது மகளுக்கு 13 வயதே இருக்கும் போது குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த வருடம் 15 வயது சிறுவனுடன் அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த வருடம் இந்த திருமணம் நடந்த நிலையில் இந்த வருடம்தான் அந்த விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது. சிறுமியை திருமணம் செய்த ராஜரத்தின தீட்சிதர் கைது செய்யப்பட்டார். அதேபோல் திருமணத்தை நடத்தி வைத்த மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேஸ்வரா தீட்சிதர் என்பவரும் கைது செய்யப்பட்டார். தற்போது இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரித்தால் உண்மை வெளியாகிவிடும் என்பதற்காக அந்த சிறுமியை அவர்கள் மறைத்து வைத்துள்ளனர். திருமண பதிவுகளை வைத்துதான் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். திருமண மண்டபத்தில் 2021 ஜனவரி 25 அதிகாலையில் நடைபெற்ற திருமண பதிவை வைத்து, இந்த திருமணத்தை உறுதி செய்துள்ளனர். ஆனால் இது கூட பொய் என்று அவர்கள் சொல்ல வாய்ப்பு உள்ளதால் புகைப்பட ஆதாரங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
இந்த சிறுமிக்கு திருமணம் செய்ததோடு மட்டுமின்றி போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக அந்த சிறுமியை ஒளித்து வைத்துள்ளனர். போலீசார் விசாரணைக்கு வந்த போது விசாரணை செய்ய விடாமல், சிறுமி ஊரில் இல்லை என்று கூறி, வீட்டிற்கு உள்ளேயே அறை ஒன்றில் ஒளித்து வைத்து உள்ளனர். இந்த வழக்கில் இவர்கள் மூவர் தவிர இன்னும் பலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கைதான 3 பேரும் 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த கைதை கண்டித்து நேற்று இரவு தீட்சிதர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு போராட்டம் செய்தனர். சாலைகளில் பூசணிக்காய் உடைத்து தீட்சிதர்கள் போராட்டம் செய்தனர். தீட்சிதரை விடுதலை செய்ய கோரி போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் அங்கே குவிக்கப்பட்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடலூர் மாவட்டத்தில் பதிவான 22 வழக்குகளில் 4 குழந்தை திருமண வழக்குகளில் தீட்சிதர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஒருவரை தீட்சிதர் கனகசபை மேடைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மற்ற தீட்சிதர்கள் அதனை தடுத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட சர்ச்சையில் அப்பெண்ணை சாதி பெயர் சொல்லி தீட்சிதர்கள் திட்டியதாக அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் தனியாக பணம் வசூலிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு விசாரணை செய்தது. பின்னர், கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அறிவித்தது. இது குறித்து அரசாணையை கடந்த மே மாதம் வெளியிட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு புகார்கள், மனுக்கள் வந்த நிலையில் அங்கு ஆய்வு மேற்கொள்ள அறநிலையத்துறை முடிவு செய்தது. பொது கோவில்களில் புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளலாம் என்பதால், அறநிலையத்துறை கடந்த ஜூன் மாதம் அங்கு ஆய்வு செய்ய முடிவு எடுத்தது. ஆனால் ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளிடம் தீட்சிதர்கள், ஆவணங்களை வழங்க மறுத்தனர். கோவில் கணக்கு வழக்கு விவரங்களை வழங்க மறுத்தனர். சிதம்பரம் நடராஜர் கோவில் பொதுக்கோவில் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பொதுக்கோவில்களில் ஆய்வு நடத்த அறநிலையத்துறைக்கு உரிமை உள்ளது. புகார் வரும் பட்சத்தில் இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959 பிரிவு 23, 28ன் படி ஆய்வு செய்ய முடியும். ஆனாலும் தீட்சிதர்கள், ஆவணங்களை வழங்க மறுத்து அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.