ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார், திடீரனெ்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
தமிழக ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார். இவர் கடந்த 1975ம் ஆண்டில் ஐபிஎஸ் பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாவார். இவர் முதல் முதலாக பட்டுக்கோட்டை உதவி சூப்பிரண்டாக பணியை தொடங்கினார்.
அதன்பிறகு தர்மபுரி, சேலம், வேலூர் திண்டுக்கல் மாவட்ட சூப்பிரண்டாக பணியாற்றினார். அதோடு 1997ல் தென் மாவட்டங்களில் நடந்த சாதி மோதல்கள் நடந்த காலத்தில் தமிழகத்தின் தென் மண்டலத்தின் முதல் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
குறிப்பாக இவர் சென்னை போலீஸ் கமிஷனராக 2001ல் செயல்பட்டார். 2003 வரை அந்த பொறுப்பில் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு சந்தன வீரப்பனை தேடும் அதிரடிப்படை தலைவராக செயல்பட்டார். 2004ல் சந்தன வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் தமிழ்நாடு மட்டுமின்றி நீண்டகாலமாக மத்திய அரசு பணியிலும் இருந்தார். வீரப்பனை வீழ்த்திய பிறகு மத்திய அரசு பணிக்கு சென்ற விஜயகுமார் தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டார். 2012ல் சிஆர்பிஎப் எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை டைரக்டர் ஜெனரலாக இருந்தபோது பணி ஓய்வு பெற்றார்.
இருப்பினும் இவரது சேவையை பாராட்டி பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இவர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றியபோது ஜம்மு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதம், மற்றும் பிற மாநிலங்களில் இருந்த நக்சலைட்டு, மாவோயிஸ்ட் பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வந்தார். மேலும் இவர் பிரிக்கப்படாத ஜம்மு காஷ்மீர் ஆளுநருக்கு ஆலோசகராகவும் இருந்தார். கடந்த 2019ல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். அதில் கடந்த 3 ஆண்டுகள் வரை செயல்பட்டு வந்த விஜயகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் பணியை ராஜினாமா செய்துள்ள ராஜ்குமார் டெல்லியில் உள்ள வீட்டை காலி செய்து சென்னை திரும்பியுள்ளார். இதுபற்றி கூறிய விஜயகுமார், ‛‛தனிப்பட்ட காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளேன். இப்போது சென்னையில் இருக்கிறேன்” என கூறியுள்ளார். மேலும் தனது பணிக்காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இவர் கடந்த 1985 முதல் 1990 வரை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் எலைட் சிறப்பு பாதுகாப்புக் குழுவில் (SPG) பணியாற்றினார். 1991ல் அவர் சஞ்சய் அரோராவுடன் இணைந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றார். இதன்மூலம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாக ஆகியோரின் மெய்க்கப்பாளராகவும் பணியாற்றிய சிறப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.