நாட்டில் முதன்முறையாக இந்தி மொழியில் உருவான மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை மத்திய மந்திரி அமித்ஷா வெளியிட்டார்.
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இந்தி மொழியில் உருவான மருத்துவ படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்.) புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மாநில மருத்துவ கல்வி மந்திரி விஷ்வாஸ் சாரங் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதன்பின் புத்தகங்களை வெளியிட்டு மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
இந்தியில் மருத்துவ படிப்பை தொடங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது. இந்த நாள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும். இனி, கிராமப் புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் இருக்காது, அவர்கள் தங்கள் சொந்த மொழியில் பெருமையுடன் படிக்கலாம். தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு தொடங்கப்பட்டது, விரைவில் பிற மொழிகளிலும் அது தொடங்கப்படும். மேலும் எட்டு மொழிகளில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிய கல்வி கொள்கை வழியே, தாய்மொழி வழி மாணவர்களுக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார். இது ஒரு வரலாற்று முடிவு. மோடிஜியின் கீழ், உயர் கல்வியை உங்களது வசதிக்கேற்ப எந்தவொரு மொழியிலும் தற்போது நீங்கள் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.