எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவை நம்பியிருந்த கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார்.
அதிமுக தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்து 51ஆவது ஆண்டு நேற்று தொடங்கியது. இந்த கொண்டாட்டமான தருணத்தில் அதிமுக பிளவுபட்டு தனித்தனியாக நிற்கிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா என ஒவ்வொரு அணியினரும் தனித்தனியாக பொன் விழா நிறைவு விழாவை முன்னெடுத்தனர். அந்த வகையில் சசிகலா சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் நினைவு மண்டபத்திலும் எம்ஜிஆரின் தாய் சத்தியபாமா நினைவு மண்டபத்திலும், ஜானகி எம்ஜிஆர் நினைவு மண்டபத்திலும் சசிகலா மரியாதை செலுத்தினார்.
ராமாபுரம் தோட்டத்திற்கு சென்ற சசிகலாவிற்கு, எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயன் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தார். அதன்பின் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு சசிகலா மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் சசிகலா பேசியதாவது:-
அதிமுகவில் அனைத்து தொண்டர்களுக்கும் உரிமை உண்டு. இந்த கட்சி வாழையடி வாழையாக வளரும். இதை எப்படி, எப்போது, எந்த நேரத்தில் செய்வது என்பது எனக்கு தெரியும். இந்த பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள் நான் பார்த்துகொள்கிறேன். நமது ஆட்சி வந்தால் தான் மக்களுக்கு நல்லது. பயமின்றி சாலையில் நடந்து செல்லலாம். அடாவடித்தனம் எங்கும் இருக்காது. காக்கிச்சட்டை போட்டவர்கள் காலரை தூக்கிவிட்டு வேலை செய்யலாம். இந்த 17 மாத கால ஆட்சியில் மக்கள் எல்லாவற்றையும் உணர்ந்திருக்கிறார்கள்.
கட்சியில் உழைத்தவர்களை இப்போது தொடர்ந்து நீக்கி வருகிறார்கள். இது கட்சிக்கு அழகல்ல. ஜெயலலிதா போல தாயுள்ளம் இருந்தால் தான் அதிமுகவை சிறப்பாக நடத்தமுடியும். வருகிற நாடாளுமன்றத்தில் அதிமுக முழுமையான வெற்றியை பெறுவதற்கு என்ன செய்யவேண்டுமோ, அதை நிச்சயம் செய்வேன். எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடத்திய மக்களாட்சி மீண்டும் வராதா என மக்கள் எதிர்பார்த்து ஏங்கி தவிக்கிறார்கள். அதனால் தான் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவை நம்பியிருந்த கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன். கரம் கோர்ப்போம். வலிமை பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.