இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்த பாஜக!

தமிழக சட்டசபையில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் நாளை வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் நாள் சட்டசபை கூட்டத்தில் மறைந்த தலைவர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை இரண்டாம் நாளான இன்று, சட்டசபை கூடிய உடனேயே எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். கேள்வி நேரம் முடிந்த பின்னர் இந்த விவகாரத்தில் விளக்கம் அளிப்பதாகச் சபாநாயகர் அப்பாவு கூறியதை அவர்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து அவையில் கோஷம் எழுப்பியதால் அவர்களை அவையில் இருந்து வெளியேற்றச் சபாநாயகர் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் கமிஷனின் விரிவான அறிக்கையும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டிலும் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்று இருந்தது. அதைத் தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய நாட்டின் ஆட்சி, அலுவல் மொழியாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுப் பணி இனி இந்தி பேசும் மாநிலத்தவருக்கு மட்டும் என அறிவித்துவிட்டனர் என்றும் தெரிவித்தார்.

அதன் பின்னர் பல்வேறு உறுப்பினர்களும் இந்தி திணிப்பு தீர்மானம் தொடர்பாகப் பேசினர். அப்போது பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், இந்தி திணிப்பு இருந்தால் அதை பாஜக கடுமையாக எதிர்க்கும் என்றும் சி பிரிவு மாநிலங்களில் இந்தி மொழி திணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது சரி அல்ல என்றும் தெரிவித்தார். மேலும் மாநில சட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் தாய்மொழியில் இருக்க வேண்டும் என்றவர் பிரதமர் மோடி என்றும், வட இந்திய மாநிலங்களில் இந்தி தெரியாத மாநிலத்தவர் ஆங்கிலத்தில் படிக்க முடியும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து இந்தி எதிர்ப்பு தீர்மானம் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.