சாத்தான்குளம் வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்ற கோரிய மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஜுன் மாதம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பிறகு, போலீசார் தாக்கியதில் 2 பேருமே அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் என 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் எஸ்எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்..
இதனிடையே, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை கேரள மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று சப்- இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “குற்றச்சம்பவம் நடந்தபோது, சம்பந்தப்பட்ட இடத்தில் நான் இல்லை. அதனால், இந்த வழக்கை ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய ஏதாவது ஒரு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மதுரை சிறையில் அடைக்கப்பட்ட என்னை, பாளையங்கோட்டை சிறைக்கு மாற்ற வேண்டும்” என்று அதில் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ரவீந்தர் பட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ரகு கணேஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலசுப்ரமணியம், ராம் சங்கர், இளங்கோவன் ஆகியோர் ஆஜரானார்கள். இந்த சம்பவம் நடந்தபோது, ஸ்டேஷனுக்குள் மனுதாரர் இல்லை. 7 மணிக்கு அனைத்து சம்பவங்களும் நடந்துள்ளன. மனுதாரர் இரவு 11 மணிக்குத்தான் அங்கு சென்றிருக்கிறார். மொத்தம் இருக்கும் 105 சாட்சிகளில் 44 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுவிட்டதால் இந்த வழக்கு விசாரணையை கேரள மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று வாதிடப்பட்டது.
கொலை செய்யப்பட்ட ஜெயராஜின் மனைவி செல்வராணி சார்பில் இந்திரா ஜெயசிங் ஆஜராகி, நல்ல நோக்கத்திற்காகவே சென்னை உயர்நீதிமன்றம் ஐகோர்ட் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணையை கண்காணித்தது என்று வாதிட்டார்.
இரு தரப்பின் வாதங்களையும் கேட்டுக் கொண்ட அமர்வானது, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டி விட்டதால் 44 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடித்து விட்டதாலும் தற்போது விசாரணையை கேரளாவிற்கு மாற்றுவது பொருத்தமாக இருக்காது. அதனால், வழக்கு விசாரணையை கேரள மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று ரகு கணேஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.