ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டது இல்லை என சசிகலா தெரிவித்து உள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை அறிக்கை, தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், வி.கே.சசிகலா, சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளரும், தற்போதைய கூட்டுறவுத் துறை செயலாளருமான விஜயபாஸ்கர், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணை கமிஷன் அறிக்கை தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அரசியலாக்குவதை யாரும் ஏற்க மாட்டார்கள் என, வி.கே.சசிகலா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டது இல்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக கருத்துகளை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவப் படிப்புகளை நான் படித்தது கிடையாது. என்ன பரிசோதனை, எந்தெந்த மருந்துகள் தர வேண்டும் என்று மருத்துவக் குழுவினரே முடிவு செய்தனர்; ஜெயலலிதாவுக்கு முதல் தர சிகிச்சை தர வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது. வெளிநாட்டுக்கு ஜெயலலிதாவை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க நான் என்றுமே தடையாக இருந்ததில்லை; ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறேன். விசாரணை நடத்தினாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அரசியலாக்குவதை யாரும் ஏற்க மாட்டார்கள். என் மீது பழிபோடுவதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஜெயலலிதா மரணத்தை சர்ச்சையாக்கி, விசாரணை ஆணைய அறிக்கையை அரசியலாக்கி விட்டார்கள். அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்ட வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.