திமுகவுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார்: ஜெயக்குமார்

ஆளுங்கட்சியான திமுகவுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக்கோரி சபாநாயகர் அப்பாவுவிடம் அதிமுக சார்பில் கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதை குறிப்பிட்டு நேற்று அதிமுக எம்எல்ஏ-க்கள் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவை காவலர்கள் மூலம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் நியாயமாகச் செயல்பட வேண்டிய சபாநாயகர், தற்போது அரசியல் ரீதியாகச் செயல்படுவதாக நாங்கள் பார்க்கிறோம். சட்டமன்றம் என்பது வேறு. கட்சி என்பது வேறு. அதிமுக போராட்டம் அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள முடியாமல், திமுக தலைவர் கொள்ளைப் புறத்தின் வழியாக பேரவைத் தலைவர் மூலமாக எங்களைப் பழிவாங்க நினைக்கிறார். சட்டப் பேரவையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

இதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதாலும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டியும் அதிமுகவினர் நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் பகுதியான வள்ளுவர் கோட்டத்தில் நேற்று இரவு முதல் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று காலை ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் காவல் துறையினரின் உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கைது நடவடிக்கை பாயும் என போலீசார் தரப்பில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் தடையை மீறி வள்ளுவர் கோட்டத்தில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் கருப்பு சட்டையுடன் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வள்ளுவர் கோட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஜனநாயக ரீதியாக முறைப்படி போராட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்ட போதும் காவல்துறை மறுத்துள்ளது. ஆளும்கட்சிக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். உண்ணாவிரத போராட்டத்திற்கு திமுக அரசு அனுமதி மறுத்ததன் மூலம் மீண்டும் மீண்டும் ஜனநாயக படுகொலை செய்துள்ளது என்று விமர்சித்தார்.