பிரதமர் பொருளாதர நிபுணர்களுடன் ஆலோசித்து தீர்வு காண வேண்டும்: ப .சிதம்பரம்!

ரூபாயின் மதிப்பு தொடர் சரிந்து வருவதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட பொருளாதர நிபுணர்களுடன் ஆலோசித்து தீர்வு காண வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகிறது. நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.06 என்ற நிலையை எட்டியது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், பிரதமர் நரேந்திர மோடி ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட பொருளாதர நிபுணர்களுடன் ஆலோசித்து தீர்வு காண வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் உதவியற்ற அரசாங்கமாக தெரிகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதால், ரூபாய் பணவீக்கம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் வட்டி விகிதங்கள் தீவிர விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இந்த நேரத்தில், அரசாங்கத்திற்கு அனைத்து ஞானமும் அனுபவமும் தேவை என்றும், இந்திய ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி விவகாரத்தில் தீர்வு காண பிரதமருக்கு எனது அறிவுரை என்னவென்றால், நாட்டின் நலனை மையமாக கொண்டு அரசு எடுக்கக்கூடிய அடுத்த நடவடிக்கைகளை பரிசீலிக்க உடனடியாக நிபுணர்களுடன் கூட்டத்தை கூட்டி தீர்வு காண வேண்டும். அதாவது, டாக்டர் சி. ரங்கராஜன், டாக்டர் ஒய் வி ரெட்டி, டாக்டர் ராகேஷ் மோகன், டாக்டர் ரகுராம் ராஜன் மற்றும் மாண்டேக் சிங் அலுவாலியா போன்ற நிபுணர்களுடன் பிரதமர் மோடி உடனடியாக கூட்டத்தை கூட்டி தீர்வு காண வேண்டும். இவ்வாறு சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.